தங்கநகை சேமிப்பு திட்டம் நடத்தி ரூ.2 கோடி மோசடி தனியார் நிறுவன உரிமையாளர் கைது


தங்கநகை சேமிப்பு திட்டம் நடத்தி ரூ.2 கோடி மோசடி தனியார் நிறுவன உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2019 11:15 PM GMT (Updated: 19 Jun 2019 8:40 PM GMT)

தங்கநகை சேமிப்பு திட்டம் நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.

ஈரோடு,

திருப்பூர் மாவட்டம் ஆலாம்பாளையம் சுக்காகவுண்டன்புதூர் வாமலைக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமால். இவர் கடந்த மே மாதம் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், அந்தியூரில் இயங்கி வந்த ‘ஜெயம் ஜூவல்லர்ஸ் அன்டு ஜெயம் எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனத்தில் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.13 லட்சம் முதலீடு செய்ததாகவும், அந்த முதலீட்டு தொகையை நிறுவன உரிமையாளர்கள் திரும்ப வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு எஸ்.ராமு மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.கோபிநாத் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடராஜ், சரவணன், மேரி மேக்லின் மெர்சி, ராஜேஸ்வரி ஆகியோர் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்தியூரில் இயங்கி வந்த ஜெயம் ஜூவல்லர்ஸ் அன்டு ஜெயம் எண்டர்பிரைசஸ் குறித்து பல தகவல்கள் கிடைத்தன. இந்த நிறுவனத்தை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தங்கவேல் என்பவருடைய மகன் முரளிக்குமார் (வயது 34), அதே பகுதியை சேர்ந்த வேல்பாண்டியன் ஆகியோர் தொடங்கி உள்ளனர். கடந்த 2018–ம் ஆண்டு ஜனவரி மாதம் மேட்டூரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அதை தலைமையிடமாக கொண்டு அந்தியூரில் கிளை நிறுவனம் தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தில் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் வழங்குவதாக தனியார் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தனர். அதுபோல் துண்டு பிரசுரங்களும் அச்சடித்து வினியோகித்தனர். இதை நம்பிய பலரும் நிறுவனத்துக்கு வந்து பணம் முதலீடு செய்து உள்ளனர். குறுகிய காலத்தில் 50–க்கும் மேற்பட்டவர்கள் ரூ.2 கோடிவரை முதலீடு செய்து உள்ளனர். அந்த பணத்தை உரியவர்களுக்கு கொடுக்காமல் முரளிக்குமார், வேல்பாண்டியன் ஆகிய 2 பேரும் தலைமறைவாகி மோசடி செய்து விட்டனர் என்ற விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த முரளிக்குமார், வேல்பாண்டியன் ஆகியோரை போலீசார் தேடினார்கள். மேட்டூரில் இருந்து வீட்டை காலி செய்த முரளிக்குமார் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த குப்பாண்டம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.கோபிநாத் தலைமையில் போலீசார் விரைந்து சென்று முரளிக்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் வேல்பாண்டியன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:–

போலியான வாக்குறுதிகள், மோசடியான விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. எனினும் கவர்ச்சியான விளம்பரங்களால் ஏமாற்றப்படும் பொதுமக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை மோசடி நிறுவனங்களில் கொடுத்து ஏமாந்து வருகிறார்கள்.

தற்போது அந்தியூர் ஜெயம் ஜூவல்லர்ஸ் அன்டு ஜெயம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.2 கோடிவரை மோசடி செய்து உள்ளது. இந்த நிறுவனத்தின் பெயரில் யாரும் நிதி முதலீடு செய்யவேண்டாம். இந்த நிறுவனத்தில் யாராவது முதலீடு செய்து ஏமாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் உடனடியாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.


Next Story