உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றக்கோரி வழக்கு; தமிழக தேர்தல் கமி‌ஷன் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றக்கோரி வழக்கு; தமிழக தேர்தல் கமி‌ஷன் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Jun 2019 10:30 PM GMT (Updated: 19 Jun 2019 9:49 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றக்கோரிய வழக்கில் தமிழக தேர்தல் கமி‌ஷன் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தலை தமிழக தேர்தல் கமி‌ஷன் நடத்துகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தயார் செய்யப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வழி இல்லாமல் குழப்பம் அடைகின்றனர்.

அதே சமயம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் கமி‌ஷன் இணையதளத்தில் வெளியிடுகிறது. அது போல உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலையும் இணையதளத்தில் வெளியிட்டால் வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கும். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர் குறித்தும் வாக்காளர்கள் அறிந்து கொள்வது அடிப்படை உரிமை என சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் தெரிவித்து உள்ளது.

இந்திய தேர்தல் கமி‌ஷன், அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது போல தமிழக தேர்தல் கமி‌ஷன் செய்வதில்லை. அதே போல, கடந்த தேர்தலுக்கான கணக்கை முறையாக தாக்கல் செய்யாதவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களின் விவரங்கள் வாக்காளர்களுக்கு தெரிவதில்லை.

எனவே நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள் ஆகியவற்றை தமிழக தேர்தல் கமி‌ஷனின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ’உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம். அத்தனை விவரங்களையும் பதிவேற்றம் செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது‘ என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக தேர்தல் கமி‌ஷன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை அடுத்த மாதம் (ஜூலை) 16–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story