மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 6 சதவீதமாக குறைந்தது மேல் வைத்தர்ணா வறண்டது
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 6.1 சதவீதமாக குறைந்து உள்ளது. மேல் வைத்தர்ணா ஏரி வறண்டது.
மும்பை,
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 6.1 சதவீதமாக குறைந்து உள்ளது. மேல் வைத்தர்ணா ஏரி வறண்டது.
குடிநீர் வினியோகம்
மும்பை நகருக்கு மோடக்சாகர், துல்சி, விகார், தான்சா, மேல் வைத்தர்ணா, கீழ் வைத்தர்ணா மற்றும் பட்சா ஆகிய 7 ஏரிகளில் இருந்து குடிநீர் கிடைக்கிறது. இந்த ஏரிகளில் இருந்து தினசரி 3 ஆயிரத்து 420 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் வெட்டு இல்லாமல் ஒரு ஆண்டு முழுவதும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஏரிகளில் 14 லட்சத்து 47 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும். கடந்த மழைக்கால முடிவில் மும்பை பெருநகரத்துக்கு ஒரு வருடத்துக்கு வினியோகிப்பதற்கு தேவையான தண்ணீர் இருப்பில் 8 சதவீதம் குறைவாக இருந்தது.
அப்போது, 7 ஏரிகளிலும் சேர்த்து தண்ணீர் இருப்பு 13 லட்சத்து 13 ஆயிரத்து 960 மில்லியன் லிட்டராக இருந்தது.
ஏரி வறண்டது
கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகரித்த வெயிலின் தாக்கம் காரணமாக ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்தது. தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு நவம்பரில் மும்பை மாநகராட்சி 10 சதவீதம் குடிநீர் வெட்டை அமல்படுத்தியது.
கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்தது. ஏப்ரல் மாதத்தில் அந்த ஏரிகளில் 26 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது. தற்போது ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிரடியாக குறைந்து இருக்கிறது.
7 ஏரிகளிலும் தற்போது வெறும் 6.1 சதவீதமே தண்ணீர் இருப்பு உள்ளது. அதாவது 88 ஆயிரத்து 743 மில்லியன் லிட்டர் தண்ணீர் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு இந்த அளவுக்கு குறைந்ததே இல்லை. மேல் வைத்தர்ணா ஏரி வறண்டு விட்டது.
ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீர்
மும்பையின் தேவையில் 50 சதவீத தண்ணீரை வழங்கும் பட்சா ஏரியில் 0.9 சதவீதம் மட்டுமே தற்போது தண்ணீர் உள்ளது. அரபிக்கடலில் உருவான வாயு புயலின் போது நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. எனவே மும்பைவாசிகள் தண்ணீருக்காக பருவமழையை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இன்னும் ஒரு மாதத்துக்கு வினியோகம் செய்வதற்கு போதிய தண்ணீர் இருப்பதாக மாநகராட்சியின் நீரியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில், இன்னும் சில நாட்களில் பருவமழை தொடங்கி தீவிரமடைந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வழக்கத்தை விட குறைந்த அளவே பருவமழை பெய்யும் என ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story