வாணாபுரம் அருகே நகைக்கடை ஊழியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை


வாணாபுரம் அருகே நகைக்கடை ஊழியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 21 Jun 2019 4:15 AM IST (Updated: 20 Jun 2019 7:16 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே நகைக்கடை ஊழியர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணாபுரம், 

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வரகூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). இவர் திருவண்ணாமலையில் உள்ள நகைக்கடையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது தந்தை மாசிலாமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின் பாஸ்கர் அவரது தாயார் காசாம்பூவுடன் (60) வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பாஸ்கர் வேலைக்கு சென்றார். வீட்டில் அவரது தாயார் மட்டும் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் காசாம்பூ தான் வளர்க்கும் மாடுகளை தண்ணீர் அருந்த செய்வதற்காக பிற்பகல் 3.30 மணியளவில் புறப்பட்டார். அப்போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவின் அருகில் வைத்துச் சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் மாடுகளுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு அவர் திரும்பினார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் காசாம்பூ கூச்சலிட்டவாறு கதறினார். அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அது குறித்து அவரது மகன் பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வாணாபுரம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருவண்ணாமலை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்–இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கைரேகை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜ் தலைமையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரல்ரேகை பதிவுகளை சேகரித்தனர். போலீசார் கூறுகையில், காசாம்பூ வீட்டின் சாவியை மறைவான இடத்தில் வைப்பதை யாரோ நோட்டமிட்டுள்ளனர். அவர் சென்றபின் மர்மநபர்கள் சாவியை எடுத்து நகை–பணத்தை கொள்ளையடித்து சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகிறோம் என்றனர். கொள்ளையடிக்கப்பட்டநகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

பட்டப்பகலில் வங்கி ஊழியர் வீட்டில் நகை பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story