காவலாளியை கொன்று டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு


காவலாளியை கொன்று டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Jun 2019 11:00 PM GMT (Updated: 20 Jun 2019 5:05 PM GMT)

லால்குடி அருகே பூவாளூரில் காவலாளியை கொன்று விட்டு, டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பூவாளூரில், சிறுகனூர் சாலையில் ராஜா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு பெருவளநல்லூர் வடக்கு புதுத்தெருவை சேர்ந்த பாலையா(வயது 55) என்பவரை தினக்கூலி அடிப்படையில் இங்குள்ள பணியாளர்கள் காவலாளியாக நியமித்து இருந்தனர்.

இவர் தினமும் இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை அங்கு பணியில் இருப்பார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டதும், இரவு 12 மணி வரை கணக்கு பார்த்துவிட்டு டாஸ்மாக் பணியாளர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். பாலையா வழக்கம்போல் இரவு காவல் பணியில் இருந்தார்.


இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று காலை சிலர் அந்த வழியாக சென்றனர். அப்போது, காவலாளி பாலையா தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் கண்ணனுக்கும், லால்குடி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார்(லால்குடி), ராஜா(சிறுகனூர்) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் சிலர் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றதும், அதை தடுக்க முயன்ற காவலாளி பாலையாவை அவர்கள் இரும்பு கம்பி மற்றும் சுத்தியலால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.


இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர் ரங்கராஜை வரவழைத்து, சம்பவ இடத்தில் கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் ஸ்பார்க் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று படுத்துக்கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

பின்னர், பாலையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் காவலாளியை கொலைசெய்து விட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்ற மர்ம ஆசாமிகளை பிடிக்க லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காவலாளியை கொன்று டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story