இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் கலெக்டர் சி.கதிரவன் தகவல்
இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
படித்த வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் வகையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி ரூ.10 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் முதலீட்டுடன் சுய தொழில்கள் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
இந்த கடனை பெறுவதற்கு குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதே பகுதியில் 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/uye-gp என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பள்ளி, கல்லூரி மாற்று சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச்சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைத்து, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை வைத்து, மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம். எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தகுதி உள்ள மற்றும் விருப்பம் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்கிட அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய கடன் உதவி திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story