மாலையம்மன் கோவில் முன்பு கம்பி வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு உடுமலையில்
உடுமலையில் மாலையம்மன் கோவில் முன்பு கம்பி வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போடிபட்டி,
உடுமலை நகராட்சி எம்.பி. நகர் சந்திரோதயா கார்டன் பகுதியில் புகழ் பெற்ற மாலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு முன்புறம் பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வழித்தடமாகவும் இந்த பகுதியே பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த இடத்தை பூங்கா அமைப்பதற்கென கம்பி வேலி அமைக்கும் பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு கம்பி வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் உடுமலை நகராட்சி நகர் நல அலுவலர் சாந்தா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கம்பி வேலி அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக குடியிருப்புகள் அமைக்கப்படும்பொழுது பொதுப்பயன்பாட்டுக்கெனவும் பூங்கா அமைப்பதற்கெனவும் குறிப்பிட்ட அளவிலான இடத்தை நகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கவேண்டும் என்பது விதியாகும். அந்தவகையில் சந்திரோதயா கார்டன் பகுதியிலும் இந்த இடம் பூங்கா பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நீண்ட காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் வழிபாட்டுத்தலத்திற்கு வழித்தடமில்லாமல் கம்பி வேலி அமைப்பது முறையற்ற செயலாகும். நகரின் பல பகுதிகளில் இவ்வாறு பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.ஒருசில இடங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இடத்தை மீட்பு என்ற பெயரில் கம்பி வேலி அமைக்க நகராட்சி நிர்வாகம் முயற்சி செய்கிறது. இந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் மரங்கள் நட்டு பூங்காவாக்க முயற்சித்தால் பொதுமக்களே பராமரிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தை அடைத்து விட்டு கோவிலுக்கு பின்புறம் சிறிய சந்து வழியாக சென்று வழிபடச் சொல்வது எங்கள் வழிபாட்டு உரிமையில் தலையிடும் செயலாகவே பார்க்கிறோம்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.
கோவிலுக்கு முன்பு கம்பி வேலி அமைக்கும் முயற்சியை பொதுமக்கள் தடுத்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story