காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் போலீசார் விசாரணை


காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Jun 2019 4:45 AM IST (Updated: 21 Jun 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அருகே காதலி வீட்டில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடகரை புலிகண்டமுத்தூரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மணிகண்டன் (வயது 24). இவர், கல்லூரியில் படித்தபோது அங்கு படித்த ஒரு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. பின்னர் மணிகண்டன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அதன் பின்னரும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய மணிகண்டன் தனது வீட்டிற்கு செல்லாமல் திருக்கடையூர் அருகே கிடங்கலில் உள்ள தனது காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து காதலி வீட்டிலேயே கடந்த ஒரு மாதமாக மணிகண்டன் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டனின் சகோதரர் மாதவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலி வீட்டில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story