சாலை போக்குவரத்து கழகத்தில் தனியார் மயத்தை கைவிடக்கோரி போராட்டம் ஊழியர்கள் சங்கம் முடிவு
தனியார் மயத்தை கைவிடக்கோரி கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்துவது என சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலய்யன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழக நிர்வாகம் வால்வோ பஸ்களை புதுச்சேரி - சென்னை, புதுச்சேரி - பெங்களூரு போன்ற முக்கிய வழித்தடங்களில், அரசின் பெர்மிட் மூலம் தனியார் டிரைவர், கண்டக்டர்களை கொண்டு இயக்கவும், அந்த லாபத்தில் சொற்ப தொகையை சாலை போக்குவரத்து கழகத்துக்கு வழங்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நடவடிக்கை விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த முடிவு சாலை போக்குவரத்து கழகத்தை மூடுவிழாவை நோக்கி தள்ளுவதோடு அங்கு பணிபுரியும் 750 ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாக்கி விடும். பொதுமக்களின் அடிப்படையான பொதுப்போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டிய அரசும், போக்குவரத்து கழக நிர்வாகமும், அதற்கு மாறாக தனியாரை புகுத்தி அதை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தனியாரை புகுத்தும் வகையில் திட்டமிட்டு போக்குவரத்து கழகத்துக்கு வாங்கப்பட்டு வந்த நிதி படிப்படியாக குறைக்கப்பட்டது. மேலும் லாபம் தரும் வழித்தடங்கள் தனியார் பஸ் முதலாளிகளுக்கு மாற்றப்பட்டது. சாலை போக்குவரத்து கழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான நிதியை கழகத்துக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதனால் போதிய வருவாய் இல்லை என்று காரணம் காட்டி 2 மாத ஊதியம், கடந்த ஆண்டுக்கான போனஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. ஒரு சில அதிகாரிகளின் தவறான முடிவுகளால் நிரந்தர வருமானத்தை ஈட்டித்தந்த மாணவர் பஸ் சேவை மற்றும் புதுவை பல்கலைக்கழக மாணவர் பஸ் சேவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது.
அதைப்போல் மத்திய அரசின் நிதியுதவியுடன் பஸ் வாங்குகிறோம் என்று கூறி டீசல் செலவு அதிகமாகும் என்று தெரிந்தும் பல ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட பழைய பஸ்களை வாங்கியது, உதிரி பாகங்கள் வாங்குவதில் முறைகேடு, அண்டை மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெர்மிட்டுகளை மீறி பஸ்கள் வருவதை கண்டு கொள்ளாதது போன்ற இழப்புகளை ஏற்படுத்தி செயற்கையாக நிதி சிக்கல் உருவாக்கப்பட்டு உள்ளது.
சாலை போக்குவரத்து கழகத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் அரசின் முடிவினை கண்டிப்பதோடு தனியாரை புகுத்தும் முடிவை கைவிடக்கோரி கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்த ஊழியர் சங்க செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story