டிரான்ஸ்பார்மர் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்


டிரான்ஸ்பார்மர் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Jun 2019 10:45 PM GMT (Updated: 20 Jun 2019 7:36 PM GMT)

சேதுபாவாசத்திரம் அருகே டிரான்ஸ் பார்மர் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மாவட்டத்தின் கடைமடை பகுதியில் உள்ள சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. மின்னழுத்த குறைபாட்டால் மின்மோட்டார் உள்ளிட்டவற்றை இயக்க முடியாத சூழல் உள்ளது.

சேதுபாவாசத்திரம் அருகே முடச்சிக்காடு கிராமம் கலைஞர் நகர் சமத்துவபுரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து 15 நாட்களுக்கு மேலாகிறது. இதன் காரணமாக மின்மோட்டாரை இயக்க முடியாததால் அங்கு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

சாலை மறியல்

அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு விளை நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் பிடித்து நிலைமையை சமாளித்து வருகிறார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் கிராம மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சமத்துவபுரம் நாலு ரோடு அருகே உள்ள பேராவூரணி - ஊமத்தநாடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார், கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்றி அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story