8 ஏக்கரில் 1,500 அடி ஆழத்துக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க செட்டிபுண்ணியம் கல்குவாரி நீர் பயன்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


8 ஏக்கரில் 1,500 அடி ஆழத்துக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க செட்டிபுண்ணியம் கல்குவாரி நீர் பயன்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 4:15 AM IST (Updated: 21 Jun 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள்கோவில் அருகே செட்டிபுண்ணியம் கல்குவாரியில் 8 ஏக்கரில் 1,500 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. தட்டுப்பாட்டை போக்க இந்த நீரை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

செங்கல்பட்டு,

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் பிரச்சினையால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. விவசாய கிணறுகள், கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியத்தில் உள்ள கல்குவாரியில் நீர் நிறைந்து காணப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இந்த நீரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செட்டிபுண்ணியம் புலிப்பாக்கம் எல்லைக்கு நடுவே 8 ஏக்கரில் கல்குவாரி ஒன்று கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்தது. பின்னர் பொதுமக்களின் எதிர்ப்பால் அந்த கல்குவாரி மூடப்பட்டது. முன்புபெய்த பலத்த மழையால் செட்டிபுண்ணியம் கல்குவாரியில் அதிகஅளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மேலும் பாறை ஊற்றும் அதிகமாக உள்ளதால் அந்த இடம் கடல் போல காட்சியளிக்கிறது. சுமார் 1,500 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்த தண்ணீர் குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும் அப்பகுதி மக்கள் துணிகளை துவைப்பதற்கும், ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவதற்கும் மட்டுமே தண்ணீரை பயன்படுத்துகின்றனர். பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் இளைஞர்கள் இங்கு வந்து நீச்சல் அடித்து குளிப்பது வழக்கம். மேலும் அங்கு ஏராளமான மீன்களும் வளர்ந்து வருகின்றன.

நல்ல சுத்தமாக எவ்வித பாசியும் இன்றி கடல் போல காட்சியளிக்கும் இந்த தண்ணீரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு தீரும்.

இதுகுறித்து கல்குவாரி ஊழியர் ஒருவர் கூறுகையில், பொதுப்பணித்துறையினர் இங்கு வந்து ஆய்வு நடத்தியதில் வெடிபொருட்கள் பயன்படுத்தியதால் தண்ணீர் மாசுபட்டு விட்டதாக கூறியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மகேந்திரா சிட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனிடம் கேட்டபோது, ‘கல்குவாரி தண்ணீரை சரிசெய்ய என்ன செய்ய வேண்டுமோ? அதனை செய்து பொது மக்களுக்கு வழங்குங்கள்’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story