மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 4:00 AM IST (Updated: 21 Jun 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததால், குற்றாலத்தில் உள்ள அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தென்காசி, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததால், குற்றாலத்தில் உள்ள அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

சீசன் தொடங்கியது

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததாலும், குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீசன் தொடங்கியது. பின்னர் உருவான ‘வாயு’ புயலால் தென்மேற்கு பருவமழை குறைந்தது. இதனால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குறைவான அளவே தண்ணீர் விழுந்தது.

இதனால் அருவிகளில் உற்சாகமாக குளிக்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தபோதும் அவர்கள் குறைந்த அளவில் விழுந்த தண்ணீரில் நீண்ட வரிசையில் நின்று குளித்துச்சென்றனர்.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று அதிகாலையில் பரவலான மழை பெய்தது. இதன் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.

ஆனால், குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் மெயின் அருவியில் கூட்ட நெரிசல் இன்றி அவர்கள் நீண்ட நேரம் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

சாரல் மழை

இதேபோன்று ஐந்தருவியிலும் நீர்வரத்து அதிகரித்தது. அங்கும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தார்கள். குற்றாலத்தில் நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. நாள் முழுவதும் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story