மணக்குள விநாயகர் கோவில் அருகே குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்த 2 பெண்கள் பிடிபட்டனர்


மணக்குள விநாயகர் கோவில் அருகே குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்த 2 பெண்கள் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 21 Jun 2019 4:00 AM IST (Updated: 21 Jun 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மணக்குள விநாயகர் கோவில் அருகே குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்த 2 பெண்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 குழந்தைகளை மீட்டனர்.

புதுச்சேரி, 

புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களை குறிவைத்து சில பெண்கள் குழந்தைகளை அனுப்பி பிச்சையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மணக்குள விநாயகர் கோவில் அருகே நேற்று காலை 2 பெண்கள் நின்று கொண்டு குழந்தைகளை அனுப்பி பக்தர்களிடம் பிச்சை எடுப்பதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் சைல்ட் லைன் அமைப்பை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த 2 பெண்களையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 குழந்தைகளை மீட்டனர். பின்னர் அவர்களை பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்களை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த குழந்தைகள் அவர்களுடைய குழந்தைகள்தான் என்பது தெரியவந்தது. இனிமேல் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.

Next Story