மனைவியை செல்போனில் படம் பிடித்ததை தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது


மனைவியை செல்போனில் படம் பிடித்ததை தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2019 3:45 AM IST (Updated: 21 Jun 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில் மனைவியை செல்போனில் படம் பிடித்ததை தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவரை தாக்கிய மற்றொரு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரை போலீசார் கைது செய்ய சென்றபோது கியாசை திறந்து விட்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம்,

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அபெக்ஸ் காலனியில் வசிப்பவர் அப்துல் கரீம் (வயது 35). மாற்றுத்திறனாளியான இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பாத்திமா (30). நேற்று முன்தினம் இரவு பாத்திமா ஈரோட்டில் உள்ள தனது தாயை பார்க்க செல்வதற்காக குமாரபாளையம் காலனி ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் கணவருடன் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஆட்டோ டிரைவர் கணேஷ் (47) பாத்திமாவை செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதை அப்துல் கரீம் தட்டிக்கேட்டார். அப்போது அப்துல் கரீமை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அவரை கணேஷ் அடித்து உதைத்து உள்ளார். இதில் அப்துல் கரீமின் வலது கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

அப்போது கணேஷ் பாத்திமாவிடம், “உனது கணவர் ஊனமாக உள்ளார். அவரால் என்ன செய்ய முடியும்? உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ என்னுடன் வந்து விடு” எனக் கூறியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கணேஷ் அங்கிருந்து சென்று விட்டார். கணேஷ் தாக்கியதில் காயம் அடைந்த அப்துல் கரீம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கணேசை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் கணேஷ் வீட்டில் இருந்த கியாசை திறந்து விட்டு தீப்பெட்டியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, வீட்டுக்குள் வந்தால் கொளுத்திக்கொள்வேன் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஒன்றும் செய்ய முடியாமல் சென்று விட்டனர்.

இதற்கிடையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் ஏராளமானோர் தாக்கப்பட்ட அப்துல் கரீமுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவரை தாக்கிய மற்றொரு ஆட்டோ டிரைவர் கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையில் கணேஷ் வீட்டுக்கும் சில ஆட்டோ டிரைவர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்து கணேஷ் தப்பிச்செல்ல முயன்றார். அவரை ஆட்டோ டிரைவர்கள் சிலர் பிடித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து கணேசை கைது செய்த போலீசார், அவரை திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Next Story