நெய்வேலி அருகே, கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிப்பு - வாலிபர் கைது
நெய்வேலி அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி,
நெய்வேலி அருகே உள்ள மேல்வடக்குத்து மேற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ், தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சுரேசிடம் பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். உடனே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி, சுரேசின் சட்டை பையில் இருந்த 600 ரூபாயை பறித்துக் கொண்டு ஓடினார். இதில் பதறிய சுரேஷ் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை விரட்டிச் சென்றனர். இருப்பினும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.
இதுகுறித்து சுரேஷ், நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வடக்குத்து காந்திநகரை சேர்ந்த சவுந்திரபாண்டியன்(25) என்பவர் தான் சுரேசிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சவுந்திரபாண்டியனை போலீசார் கைது செய்தனர். கைதான சவுந்திரபாண்டியன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story