வனத்துறையில் காலியாக இருக்கும், கால்நடை டாக்டர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
வனத்துறையில் காலியாக இருக்கும் கால்நடை டாக்டர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை,
தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் 597 பேருக்கு 6 மாத கால பயிற்சி கோவையில் நடந்து வருகிறது. அவர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையத்தில் உள்ள ஆதித்யா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருபவர்களுக்கு உபகரணம் மற்றும் கையேடுகளை வழங்கினார்கள். பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது கூறியதாவது:-
மக்களையும், வனவிலங்குகளையும் காப்பாற்றும் பணியை நீங்கள் மேற்கொள்ள உள்ளர்கள். இந்த பணியில் அனைவருடனும் நன்றாக பழகுவதுடன், இனிமையான வார்த்தைகளை பேசுங்கள். இந்த பயிற்சியின் மூலம் உங்களுக்கு நீர், புவியியல், சுற்றுச்சூழல் மேலாண்மையுடன் தற்காப்பு கலைகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதை சிறப்பாக கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்.
ஒரு நாடு 33 சதவீத வனப்பரப்பை பெற்று இருந்தால் அந்த நாடு செழிப்பு மிக்கதாக கருதப்படும். அந்த வகையில் தமிழ்நாடு 20.25 சதவீத வனப்பரப்பை பெற்று இருக்கிறது. நமது நாட்டிலேயே வனப்பரப்பில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம் தமிழகம்தான் ஆகும். மனிதகுலம் இந்த பூமியில் வாழ வனம் மற்றும் வனஉயிர் பாதுகாப்பு மிகவும் முக்கியம் ஆகும். எனவே நீங்கள் வனப்பகுதியை நேசித்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, பிற மாநிலங்களைவிட அதிகமாக பூக்கும் தாவரங்களை கொண்டுள்ள வனப்பகுதியாக தமிழகம் விளங்குகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கிராமங்களை பசுமையாக மாற்றும் வகையில் அரசின் சார்பில் நர்சரிகள் பராமரிக்கப்பட்டு மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாம் வனத்தை தேடி செல்லாமல் நம்மை சுற்றி இருக்கும் பகுதிகளில் மரங்களை நட்டு வனப்பகுதிகளை உருவாக்க வேண்டும் என்றார்.
பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வனத்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் உள்ள தகுதிவாய்ந்த தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை, கூடலூர் உள்பட சில இடங்களில் வன கால்நடை டாக்டர்கள் பணியிடம் காலியாக இருப்பதால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக எங்கள் கவனத்துக்கு வந்தது. எனவே எங்கு எல்லாம் வனகால்நடை மருத்துவ பணியிடம் காலியாக இருக்கிறதோ அவை விரைவில் நிரப்பப்படும்.
தற்போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். திண்டுக்கல்லில் காவிரி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் திண்டுக்கல்லில் குடிநீர் பிரச்சினை இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்து கேட்பு கூட்ட நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறுவது தவறானது ஆகும். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கந்தசாமி, கலெக்டர் ராஜாமணி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் துரைராசு, கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு வன உயர் பயிற்சியக முதல்வர் அன்வர்தீன், தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பயிற்சி பெற்று வருபவர்கள் சிலம்பம், பிரமீடு அமைத்தல், சுருள்வாள் சுற்றுதல் உள்பட பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தார்கள். இதில் சுருள்வாளை சுற்றியபோது தினேஷ் என்ற பயிற்சி வனவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் ரத்தம் கொட்டியது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story