தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு, கைதான வாலிபரிடம் தீவிர விசாரணை, கோவையில் உள்ள நண்பர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை


தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு, கைதான வாலிபரிடம் தீவிர விசாரணை, கோவையில் உள்ள நண்பர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 21 Jun 2019 4:45 AM IST (Updated: 21 Jun 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கைதானவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கோவையில் உள்ள அவருடைய நண்பர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கோவை,

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் ஏராளமானோர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான கும்பலுடன் கோவையை சேர்ந்த சில வாலிபர்களுக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கேரள மாநிலம் கொச்சியில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் தலைமையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த 12-ந் தேதி கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் அன்புநகரை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 32), போத்தனூர் அக்ரம் ஜிந்தா (26), சதாம் உசேன் (26), தெற்கு உக்கடம் ஷேக் இதயத்துல்லா (38), ஜாகின் ஷா (28), குனியமுத்தூர் அபுபக்கர் (29) ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர்கள் வீடுகளில் இருந்து 300 தோட்டாக்கள், 14 செல்போன்கள், 6 மெமரி கார்டுகள், 29 சிம்கார்டுகள், 10 பென்டிரைவ்கள், 4 ஹார்டு டிஸ்குகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர்களை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். அதன்பேரில் அவர்கள் 6 பேரும் ஆஜரானார்கள்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகியோருக்கு தடை செய்யப்பட்ட சிமி மற்றும் ஐ.எஸ். இயக்கங்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ‘உபா‘ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அத்துடன் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் அனுமதி பெற்று அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இதில் முகமது அசாருதீனிடம் நடத்தப்பட்ட விசாரணை யில், அவர் சில ஆவணங்களை தனது நெருங்கிய நண்பரும், கோவை குனியமுத்தூர் பி.கே.புதூரை அடுத்த சாந்திநகரை சேர்ந்தவருமான சினோத்திடம் (35) கொடுத்து இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 பேர் நேற்று மதியம் 1 மணியளவில் முகமது அசாருதீனை பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர். அவர்கள் சாந்திநகரை சேர்ந்த சினோத் (35) என்பவர் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் சினோத் இருந்தார். முகமது அசாருதீனை அருகில் வைத்துக்கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சினோத்திடம் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் என்னென்ன ஆவணங்களை கொடுத்து இருக்கிறார் என்று கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலின் அடிப்படையில் அந்த வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.

சோதனைக்கு பின்னர் அந்த வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் அடங்கிய கணினியில் இருக்கும் 2 ஹார்டு டிஸ்க்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள், முகமது அசாருதீனை அழைத்துக்கொண்டு கொச்சி சென்றனர்.

சினோத் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் நடத்திய சோதனை முடிந்ததும் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனிடையே முகமது அசாருதீன் மற்றும் ஷேக் இதயத்துல்லா ஆகியோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்து உள்ளன. அதாவது முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா மற்றும் கோவை, கேரளாவை சேர்ந்த 30 பேர் வாட்ஸ் அப்பில் தனி குரூப்பை ஏற்படுத்தி பயங்கரவாத கருத்துகளை பகிர்ந்து கொண்டது தெரியவந்து உள்ளது.

இதில் சிலருக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர். எனவே அந்த 30 பேர் மீதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

விரைவில் அவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தவும் திட்டமிட்டு உள்ளது. தடை செய்யப் பட்ட இயக்கங்களுக்கும், இவர்களுக்கும் இடையே பெரிய அளவில் பணபரிவர்த்தனை ஏதும் நடைபெற்றதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story