கோவிலில் சாமி கும்பிட்ட போது கற்பூர தீ சேலையில் பிடித்ததில் பெண் உடல் கருகினார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


கோவிலில் சாமி கும்பிட்ட போது கற்பூர தீ சேலையில் பிடித்ததில் பெண் உடல் கருகினார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 21 Jun 2019 4:30 AM IST (Updated: 21 Jun 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் சாமி கும்பிட்ட போது கற்பூர தீ சேலையில் பிடித்ததில் பெண் உடல் கருகினார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு, 

கோவிலில் சாமி கும்பிட்ட போது கற்பூர தீ சேலையில் பிடித்ததில் பெண் உடல் கருகினார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

45 வயது பெண்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுனில் விஸ்வேஸ்வர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாயா சந்திரசேகர் (வயது 45). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள ஆதர்ஷ நகரில் அமைந்துள்ள விஸ்வநாத சாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அவர் விஸ்வநாத சாமியை தரிசனம் செய்துவிட்டு கோவில் வளாகத்தில் உள்ள நாகதேவதையை தரிசித்தார். பின்னர் நாகதேவதை சிலையை அவர் 2 முறை சுற்றி வந்தார்.

இதற்கிடையே அந்த நாகதேவதை சிலை முன்பு யாரோ கற்பூரம் பற்றவைத்து சென்றிருந்தனர். அந்த கற்பூரம் எரிந்து முடியும் நிலையில் இருந்தது. ஆனால் இதை கவனிக்காத சாயா நாகதேவதை சிலை முன்பு நின்று சாமி கும்பிட்டார். அப்போது அவரது சேலையில் கற்பூர தீ பிடித்தது. இதை அவர் கவனிக்காமல் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அவர் சில அடி தூரம் நடந்து சென்றதும் அந்த தீ அவரது சேலை முழுவதும் பிடித்து எரிந்தது.

உடல் கருகினார்

இதனால் அவர் அய்யோ... அம்மா... என அலறினார். இதை பார்த்த கோவிலுக்கு வந்திருந்த சில பக்தர்கள் அவரின் சேலையில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சேலையில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அவரது உடலில் தீப்பற்றியது. இதனால் அலறியடித்த படி அருகில் இருந்த ஒரு சன்னதிக்குள் சாயா ஓடினார்.

உடனே சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் அவரது உடலில் பிடித்த தீயை அணைத்தனர். அதன்பின்னர், உடல் கருகிய அவரை மீட்டு உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் பக்தர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

60 சதவீத தீக்காயம்

இதுகுறித்து கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறுகையில், சாயாவின் 2 கால்களிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கைகளில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு 60 சதவீதம் அளவுக்கு காயம் உண்டாகியுள்ளது. அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார். இதுகுறித்து உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சாயாவின் சேலையில் கற்பூர தீப்பிடித்து எரிந்த சம்பவம் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி நெஞ்சை பதறவைத்து வருகிறது.

Next Story