மைசூரு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு


மைசூரு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 21 Jun 2019 4:30 AM IST (Updated: 21 Jun 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே ஆய்வு செய்தார். அப்போது அவர், மழை பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மைசூரு, 

மைசூரு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே ஆய்வு செய்தார். அப்போது அவர், மழை பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே ஆய்வு

மைசூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூறைக்காற்று மற்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதன்காரணமாக மாவட்டத்தில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. விளைநிலங்களும் நாசமாகின. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மைசூருவில் மழை மற்றும் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று மாநில வருவாய் துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ், கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றனர். இந்த குழுவினர் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டனர். மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டார்.

அப்போது விவசாயிகள் தங்கள் குறைகளை கண்ணீர் மல்க அவரிடம் தெரிவித்தனர். இதனை பொறுமையாக கேட்ட மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

இதையடுத்து மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ், கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள், அதற்கு ஆகும் செலவுகள், மக்களுக்கு சேர வேண்டிய சலுகைகள், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் மக்களிடம் சென்றடைந்ததா? என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

அப்போது அரசு பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் பற்றியும், மக்களுக்கு அரசு சலுகைகள் சென்றடையாமல் இருப்பது பற்றியும் அறிந்த அவர், அதிகாரிகள் மீது கோபம் கொண்டார். அரசு பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், மக்களின் சலுகைகள் அவர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

கடும் நடவடிக்கை

மேலும் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே அந்த கூட்டத்தில் பேசுகையில், விவசாயிகள், ஏழை மக்களை அரசு அலுவலகங்களுக்கு அலைய வைக்கக்கூடாது. நிவாரணம் மற்றும் சலுகைகள் உடனடியாக மக்களுக்கு சென்றடைய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இதில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். பணியில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மைசூரு மாவட்டத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து என்னிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

Next Story