திருச்சியில் பரபரப்பு: போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் திடீர் முற்றுகை


திருச்சியில் பரபரப்பு: போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 20 Jun 2019 10:15 PM GMT (Updated: 20 Jun 2019 9:20 PM GMT)

திருச்சி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருபவர் என்.காமராஜ். இவர், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவரின் மோசடி புகார் தொடர்பான வழக்கில், அவருடைய தரப்பு வக்கீலாக வாதாடி வருகிறார். வக்கீல் காமராஜ் நேற்று திருச்சி மாவட்ட முதன்மை கோர்ட்டில் பணியில் இருந்தபோது, ரியல் எஸ்டேட் புரோக்கர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர், தன் மீதான வழக்கை சரியாக கையாளத்தெரியவில்லை என்று கூறி, காமராஜை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வக்கீல் காமராஜ், திருச்சி குற்றவியல் வக்கீல் சங்கத்தில் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து திருச்சி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு, திருச்சி குற்றவியல் வக்கீல் சங்க செயலாளர் வெங்கட் தலைமையில் பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரகுமார், வக்கீல் காமராஜ் மற்றும் திரளான வக்கீல்கள் செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க தாமதிப்பது ஏன்? என்று கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் நடத்திய வக்கீல்களிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விஜயபாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story