மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும எல்லை பால்கர், ராய்காட் வரை விரிவாக்கம் சட்டசபையில் ஒப்புதல்
மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும எல்லையை பால்கர், ராய்காட் மாவட்டம் வரை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு சட்டசபை மற்றும் சட்ட மேலவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
மும்பை,
மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும எல்லையை பால்கர், ராய்காட் மாவட்டம் வரை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு சட்டசபை மற்றும் சட்ட மேலவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
எம்.எம்.ஆர்.டி.ஏ.
மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வளர்ச்சிக்கான திட்டமிடும் அதிகாரம் பெற்ற மராட்டிய அரசின் பெரிய அமைப்பாகும். மாநில முதல்-மந்திரியை தலைவராக கொண்டு செயல்படும் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லையில் மும்பை, கல்யாண்- டோம்பிவிலி, மிரா-பயந்தர், தானே, உல்லாஸ்நகர், பிவண்டி-நிஜாம்பூர், நவிமும்பை ஆகிய பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளில் மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சாலை அமைத்தல், மேம்பாலங்கள் கட்டுதல், மெட்ரோ ரெயில் வழித்தடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து உள்ளது.
2 ஆயிரம் சதுர கி.மீ. விஸ்தரிப்பு
குறிப்பாக மும்பையில் நாட்டிலேயே முதன் முறையாக மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தியது. இதுதவிர பல்வேறு மெட்ரோ வழித்தடங்களையும் அமைத்து வருகிறது. இதுதவிர மேம்பாலங்கள், சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லையை 2 ஆயிரம் சதுர கி.மீ. தூரத்துக்கு விஸ்தரிப்பு செய்ய கடந்த பிப்ரவரி மாதம் மராட்டிய மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல், பென், காலாப்பூர், அலிபாக் தாலுகாக்கள், பால்கர் மாவட்டத்தில் உள்ள பால்கர் தாலுகா மற்றும் வசாயின் ஒரு சில பகுதிகள் எம்.எம்.ஆர்.டி.ஏ.வின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
சீரான வளர்ச்சி
மேற்கண்ட பகுதிகளை மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும எல்லைக்குள் கொண்டு வரும் திட்டத்துக்கு நேற்று சட்டசபை மற்றும் சட்டமேலவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதுபற்றி நகர மேம்பாட்டுத்துறை இணை மந்திரி யோகேஷ் சாகர் கூறுகையில், ‘‘மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் செயல்பாடுகள் மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம பஞ்சாயத்துகளின் உரிமைகளை பறிக்காது. தற்போது, எம்.எம்.ஆர்.டி.ஏ. எல்லைக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கும் பகுதிகளில் சீரான மற்றும் விரைவான வளர்ச்சி பெற வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story