ஓடும் காரில் திடீர் தீ: நொறுக்கு தீனி ஆலை உரிமையாளர் உடல் கருகி சாவு கதவுகள் பூட்டிக்கொண்டதால் பரிதாபம்
மும்பை - கோவா நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. இதில் கார் கதவுகள் பூட்டிக்கொண்டதால் நொறுக்கு தீனி ஆலை உரிமையாளர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தானே,
மும்பை - கோவா நெடுஞ்சாலையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. இதில் கார் கதவுகள் பூட்டிக்கொண்டதால் நொறுக்கு தீனி ஆலை உரிமையாளர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் தீப்பிடித்தது
தானேயில் உள்ள பி.தானாவாலா சால் பகுதியை சேர்ந்தவர் சச்சின் காம்ளே (வயது48). இவருக்கு சொந்தமான நொறுக்கு தீனி தயாரிக்கும் ஆலை ரத்னகிரி மாவட்டம் சிப்லுனில் உள்ளது. இவர் நேற்று முன்தினம் கேட் பகுதியில் இருந்து சிப்லுனில் உள்ள ஆலைக்கு காரில் தனியாக சென்றார்.
காலை 11.15 மணியளவில் கார் மும்பை - கோவா நெடுஞ்சாலையில், ரத்னகிரி மாவட்டம் போரஜ் கிராமம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென காரில் தீப்பிடிக்க தொடங்கியது. தீப்பிடித்தவுடன் லாக் தொழில்நுட்பம் செயல் இழந்து கதவுகள் பூட்டி கொண்டன. இதனால் சச்சின் காம்ளேவால் காரின் கதவை திறந்து வெளியே வரமுடியவில்லை.
உடல்கருகி பலி
இந்தநிலையில் தீப்பிடித்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் வேலை பார்த்து கொண்டு இருந்த நெடுஞ்சாலை தொழிலாளர்கள் ஓடி வந்தனர். பின்னர் டேங்கர் லாரியில் இருந்து தண்ணீரை ஊற்றி காரில் எரிந்த தீயை அணைத்தனர்.
இந்தநிலையில் தகவல் அறிந்து சென்ற போலீசார் உடல் கருகிய நிலையில் காருக்குள் கிடந்த சச்சின் காம்ளேயை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story