மாவட்ட செய்திகள்

தடைக்காலம் முடியும்முன் மீன்பிடிக்க சென்ற 1,196 படகுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்ப நடவடிக்கை + "||" + Went fishing before the ban For owners of 1,196 boats Action to send notice

தடைக்காலம் முடியும்முன் மீன்பிடிக்க சென்ற 1,196 படகுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்ப நடவடிக்கை

தடைக்காலம் முடியும்முன் மீன்பிடிக்க சென்ற 1,196 படகுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்ப நடவடிக்கை
தடைக்காலம் முடியும்முன் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1,196 படகுகளின் உரிமையாளர்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீசு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம்,

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடைக்காலம் அறிவித்து வருகின்றன. இதன்படி கடந்த 15-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இதனை தொடர்ந்து 16-ந்தேதி காலையில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்நாளே மீன்துறையினர் அனுமதி டோக்கன் பெறாமல் சில மீனவர்கள் தடையை மீறி மீன்பிடிக்க சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசின் உத்தரவினை மீறி மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெறாமல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- தடைக்காலம் முடிவடைந்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தடையை மீறி சில மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளில் 730 படகுகளிலும், மண்டபம் பகுதியில் 400 படகுகளிலும், தொண்டி சோழியக்குடி பகுதிகளில் 66 படகுகளிலும் என 1,196 படகுகள் தடையை மீறி சென்றதாக தெரியவந்துள்ளது.

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திற்கு எதிராக மீனவர்கள் இவ்வாறு சென்றது தொடர்பாக அந்தந்த உதவி இயக்குனர்கள் என்னிடம் குற்ற அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் அளிக்க ஏதுவாக நேரில் ஆஜராக தனித்தனியாக நோட்டீசு அனுப்பப்பட உள்ளது. ஓரிரு நாளில் இந்த நோட்டீசு அனுப்பப்படும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் குற்றம் உறுதிசெய்யப்பட்டால் சட்டவிதிகளின்படி தடைவிதிப்பு, அபராதம், டீசல் மானியம் ரத்து உள்ளிட்ட தண்டனை வழங்கப்படும். மாவட்டத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி 85 சதவீத மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. மீதம் உள்ளவர்கள் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யாததால் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆவணங்கள் தாக்கல் செய்தால் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மீன்பிடி தடைக்காலம் முடியும் முன்னரே மீன்பிடிக்க சென்றது குறித்து மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் 15-ந் தேதி மதியமே மீன்பிடிக்க சென்றுவிட்டனர். ஒரே பகுதியில் மீன்பிடிக்கும் புதுக்கோட்டை பகுதி மீனவர்கள் சென்று மீன்களை அள்ளிவிட்டால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது.

இத்தனை நாள் வாழ்வாதாரம் இன்றி காத்திருந்ததற்கு பலனில்லாமல் போய்விடும் என்பதால் சிறிதுநேரம் முன்னரே சென்றதாக கூறிவருகின்றனர். அந்த வகையில் மீனவர்களின் கருத்தின் அடிப்படையில் மீனவர்களை இந்த முறை மன்னிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேதவறினை மீண்டும் செய்தால் படகின் அங்கீகாரம் ரத்து செய்யபடும் என்று எச்சரிக்கையுடன் மீனவர்களை மன்னிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.