வத்தலக்குண்டு அருகே, சொத்து தகராறில் விவசாயி கொலை - தம்பி கைது
வத்தலக்குண்டு அருகே சொத்து தகராறில் விவசாயியை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
வத்தலக்குண்டு,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள வடிவேல்புரத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது 55). விவசாயி. இவருடைய தம்பி பெருமாள் (40). இவரும் அதே ஊரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே சொத்தை பிரித்தது தொடர்பாக பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 2 பேருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த பெருமாள் தனது அண்ணன் என்றும் பார்க்காமல், அரிவாளால் முத்தையாவை சரமாரியாக வெட்டினார்.
இதில் உடலில் பல இடங் களில் வெட்டு விழுந்ததால், முத்தையா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர் கள் அவரை மீட்டு, வத்தலக் குண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முத்தையா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த விருவீடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி பெருமாளை கைது செய்தனர். கொலையான முத்தையாவுக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். சொத்து பிரச்சினையில் அண்ணனை, தம்பி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story