சேலத்தில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் 3 பேர் கைது


சேலத்தில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2019 10:45 PM GMT (Updated: 2019-06-21T19:55:57+05:30)

சேலத்தில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டக்கவுண்டம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியின் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சேலம் கடைவீதிக்கு வந்தார். பின்னர் அவர், அங்குள்ள ஒரு கடையில் கல்லூரிக்கு தேவையான புத்தகங்களை வாங்கிவிட்டு இரவில் ஊருக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை மாணவியின் சகோதரி கணவர் ஓட்டி சென்றார்.

அப்போது, மாமாங்கம் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது, திடீரென 5 பேர் அங்கு வந்து வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மாணவியுடன் வந்த அவரது சகோதரி கணவரை அடித்து துரத்தினர். தொடர்ந்து அவர்கள் மாணவியை கடத்தி முட்புதருக்குள் தூக்கி சென்றனர்.

இதையடுத்து அந்த மாணவியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மாணவியை 5 பேரும் மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தன்னை தேடி வந்த சகோதரி கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் தரப்பில் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கமி‌ஷனர் சங்கர் உத்தரவின்பேரில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த கும்பலில் யார், யார் இருந்தார்கள்? என விசாரித்தனர். அப்போது, சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள டால்மியா போர்டு, வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த ஒரு கும்பல் இதில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய அம்மாபேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 29), வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (32), மணிகண்டன் (35) ஆகிய 3 பேரை நேற்று சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜெயபிரகாசின் கூட்டாளிகள் 2 பேர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story