நிலத்தை வரன்முறைப்படுத்த ரூ.56 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது அரக்கோணம் அருகே பரபரப்பு


நிலத்தை வரன்முறைப்படுத்த ரூ.56 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது அரக்கோணம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 10:45 PM GMT (Updated: 21 Jun 2019 6:29 PM GMT)

அரக்கோணம் அருகே நிலத்தை வரன்முறைப்படுத்த லஞ்சம் வாங்கிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணம், 

சென்னை, அய்யம்பாக்கம், எழில்நகரை சேர்ந்தவர் எஸ்.முத்துராஜ் (வயது 29). இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் அரக்கோணம் அருகே மோசூர் கிராமத்தில் உள்ளது. நிலத்தை மனைகளாக பிரித்து வரன்முறைப்படுத்தி சான்றிதழ் பெற அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா (57) என்பவரிடம் கேட்டுள்ளார்.

நிலத்தை வரன்முறைப்படுத்தி அறிக்கை அளிக்க ரூ.56 ஆயிரத்து 600-ஐ லஞ்சமாக தர வேண்டும் என்று ஜீவா கேட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து முத்துராஜ் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் முத்துராஜிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.56 ஆயிரத்து 600-ஐ போலீசார் கொடுத்து அனுப்பினர். பின்னர் முத்துராஜ், ஜீவாவிடம் பணம் தயாராக உள்ளது. எங்கு வந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே வந்து கொடுங்கள் என்று கூறி உள்ளார்.

அரக்கோணம் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகில் ஜீவாவிடம், முத்துராஜ் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி, மற்றொரு விஜயலட்சுமி மற்றும் போலீசார் கையும், களவுமாக ஜீவாவை பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.56 ஆயிரத்து 600-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரையும் அழைத்து அலுவலக ரீதியான விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story