தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் காய்க்காத உளுந்து செடிகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் காய்க்காத உளுந்து செடிகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2019 11:30 PM GMT (Updated: 2019-06-22T00:52:16+05:30)

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் காய்க்காத உளுந்து செடிகளுடன் வந்த விவசாயிகள், வாயில் டியூப்பை சொருகியபடியும், பிளாஸ்திரியை ஒட்டியபடியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், 

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமார் தலைமையில் விவசாயிகள் சிலர், காய்க்காத உளுந்து செடிகளுடன் வந்தனர்.அவர்கள் கையில் உளுந்து செடிகளை வைத்திருந்ததுடன், வாயில் டியூப்பை சொருகியபடியும், பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டும் வந்திருந்தனர். அவர்கள், திடீரென கலெக்டர்அலுவலக வளாகத்தில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், விவசாயிகள் வாயில் இருந்த டியூப்பையும், பிளாஸ்திரியையும் அகற்றினர்.

தொடர்ந்து காய்க்காத உளுந்து செடிகளை விவசாயிகள், கலெக்டர் அண்ணாதுரையிடம் காண்பித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உளுந்து செடி கொடுக்கப்பட்டது. அந்த உளுந்து செடி பூச்சி தொல்லையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அது தரம் இல்லாமல் உள்ளது. நல்ல நிலையில் உள்ள உளுந்து செடியை வழங்க வேண்டும். கர்நாடகத்திடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து கூட்ட அறையை விட்டு வெளியே வந்த கக்கரை சுகுமார் கூறும்போது, அரசு வழங்கக்கூடிய மானியம் முழுமையாக எங்களுக்கு கிடைக்கவில்லை. டியூப் மூலம் உறிஞ்சக்கூடிய அளவுக்கு தான் மானியம் கிடைக்கிறது. அதை வெளிப்படுத்தும் வகையில் தான் வாயில் டியூப்பை சொருகி கொண்டும், பிளாஸ்திரியை ஒட்டிக்கொண்டும் வந்தோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உளுந்து விதை வழங்கப்பட்டது. அந்த விதை, 1000 ஏக்கரில் விதைக்கப்பட்டது. அந்த விதை நன்றாக முளைத்துள்ளது. ஆனால் காய்க்கவில்லை. தரமற்ற விதை வழங்கியதால் நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் அனைவரும் எழுந்து, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்காததை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு கோஷங்கள் எழுப்பியபடி கூட்ட அறையை விட்டு வெளியே சென்றனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் மற்றும் விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விளை நிலங்களில் கெயில், ஓ.என்.ஜி.சி. மூலம் குழாய் பதிக்கப்படும் திட்டத்தை கைவிட வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இந்த மாதத்திற்குரிய(ஜூன்) தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுத்தர மத்திய அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டம் 10 நிமிடம் நடந்தது. பின்னர் விவசாயிகள் அனைவரும் மீண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

Next Story