தூண்டில் வளைவுகள் அமைப்பதில் முறைகேடு குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் குற்றச்சாட்டு


தூண்டில் வளைவுகள் அமைப்பதில் முறைகேடு குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Jun 2019 4:15 AM IST (Updated: 22 Jun 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

தூண்டில் வளைவுகள் அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் குமரி மாவட்ட மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்ே்காவிலில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமெக் ஜெயக்குமார், மீனவ சங்க பிரதிநிதிகள் அலெக்சாண்டர், அந்தோணி, ஜான்அலோசியஸ், பெர்னார்டு, ராஜன், பனிமயம், ஆறுமுகம், ஜேசுராஜன், இசக்கிமுத்து, கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் ஸ்டீபன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் காரசாரமாக பேசினர். அதன் விவரம் வருமாறு:-

தேங்காப்பட்டணம் பகுதியில் பொழிமுகம் அருகே தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும். இதனால் அந்தப்பகுதி மீனவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. குளச்சல் நகராட்சியில் வார்டு மறுசீரமைப்பில் மீனவர்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை கிராமங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக நீரோடி, வள்ளவிளை, தூத்தூர் பகுதிகளில் வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடியப்பட்டினம் கிராமத்தில் மட்டும் 1½ கி.மீ. நீளத்துக்கு கடற்கரையை காணவில்லை. குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அமைக்கப்படும் தூண்டில் வளைவுகள் அலைகளின் சீற்றத்தால் காணாமல் போகிறது.

ஆயிரம் கிலோ எடைகொண்ட நான்முகி கற்களைத்தான் தூண்டில் வளைவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் அதைவிட எடை குறைவான கற்களை போடுவதால் கடல் அலை கற்களை இழுத்துச் சென்று விடுகிறது. அதேநேரத்தில் கேரளா, மும்பை போன்ற பகுதிகளில் அமைக்கப்படும் தூண்டில் வளைவுகள் எவ்வித சேதமும் அடைவதில்லை. ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் தூண்டில் வளைவுகள் சில காலங்களில் சேதம் அடைந்து விடுகிறது. எனவே இதில் முறைகேடுகளும், ஊழலும் நடைபெற்றுள்ளன.

இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். தூண்டில் வளைவுகளை தரமாக அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மணக்குடியில் இருந்து சொத்தவிளை செல்லும் 1½ கி.மீ. நீளமுள்ள கடற்கரை சாலை பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. இதனால் சொத்தவிளை கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்வது குறைந்து விட்டது. எனவே சொத்தவிளை கடற்கரை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசும்போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் சுமார் 72 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இங்கு கடல் அரிப்பைத் தடுக்க தற்காலிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கற்களை போட்டு தூண்டில் வளைவு அமைப்பது மட்டும் இதற்கு தீர்வாகாது. கடல் அரிப்பைத் தடுக்க ஐ.ஐ.டி. நிறுவனம் மூலம் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் திட்ட அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள 72 கி.மீ. நீள கடற்கரை பகுதியிலும் கடல் அரிப்பைத் தடுக்க நிரந்தர அலை தடுப்புச்சுவர் கட்ட ஏற்பாடு செய்யப்படும். 2 மாதத்துக்குள் இந்த திட்ட அறிக்கை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இந்த மாவட்டத்தில் உள்ள கடற்கரை சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சொத்தவிளை கடற்கரை சாலையும் உடனடியாக சீரமைக்கப்படும். நீரோடி, வள்ளவிளை, தூத்தூர் பகுதிகளில் தற்போது ரூ.114 கோடி செலவில் தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ள பகுதிக்கு மீனவர்கள் செல்லக்கூடாது. மீறி செல்லும் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார். 

Next Story