சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் அதிகளவில் கலந்து கொண்டனர்.
சேலம்,
சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. சேலம் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சேலம் மாவட்ட யோகா விளையாட்டு சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் நேற்று காலை யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் மாணவ-மாணவிகள், பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து சிறிது நேரம் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியில் நேரு யுவகேந்திரா சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ்டன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, சேலம் சாய் விளையாட்டு விடுதி பொறுப்பாளர் மாணிக்கவாசகம், அசோக பசுமை இல்ல தலைவர் கணபதி, மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் இயக்குனர் வெங்கடேஷ்வரன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த யோகா பயிற்சியில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், முதியவர்கள், அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகாசனம் செய்ததை காணமுடிந்தது. இதில், அவர்களுக்கு யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம் என 30 நிமிடங்களுக்குமேல் பயிற்சி அளிக்கப்பட்டது. யோகா ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை அளித்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் யோகா பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன..
இதுகுறித்து நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ்டன் கூறுகையில், மனம் அமைதி பெறவும், ஒருநிலைப்படுத்தவும் யோகா செய்வது அவசியம். யோகா பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் உடல் வலிமை பெறும். உடல் நலம், மனஅமைதி, நீண்ட ஆயுள், அறிவு பலம் கிடைக்கிறது. அறிவுதிறன் வாய்ந்த சமூகத்தை உருவாக்க இன்றைய உலகில் யோகா பயிற்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளது, என்றார்.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் கைலாசம் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜவிநாயகம், தாளாளர் செந்தில்குமார், முதல்வர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இதய நிறைவு தியான பயிற்சியின் தலைவர் கஸ்தூரி, யோகா ஆலோசகர் தேவி, யோகா பயிற்சியாளர் ஆனந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிகளுக்கு யோகா பயிற்சி செய்வதின் வழிமுறைகள் குறித்தும், அதன் பலன்கள் குறித்தும், தேர்வில் வெற்றிபெறக்கூடிய வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர்.
சேலம் 4 ரோடு அருகே உள்ள சிறுமலர் தொடக்கப்பள்ளியில் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. சேலம் நகர்ப்புற வட்டார கல்வி அலுவலர் மாதேஸ்வரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் அற்புதராஜ், தாளாளர் ஜான் ஜோசப் உள்பட ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். யோகா பயிற்சியாளர் அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி செய்வதின் வழிமுறைகள் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி பேசினார்.
Related Tags :
Next Story