பெண் என்ஜினீயரிடம் ரூ.50 லட்சம் மோசடி - பெங்களூருவை சேர்ந்த டிரைவர் கைது


பெண் என்ஜினீயரிடம் ரூ.50 லட்சம் மோசடி - பெங்களூருவை சேர்ந்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-22T01:50:07+05:30)

பெண் என்ஜினீயரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூருவை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). இவருடைய மனைவி நளினி (28). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் பெங்களூருவில் தான் தங்கி இருக்கும் வீட்டில் இருந்து நிறுவனத்துக்கு காரில் செல்வது வழக்கம்.

அப்போது அவருக்கும், அந்த கார் டிரைவரான பெங்களூருவை சேர்ந்த இருசப்பன் என்கிற விஜய் (34) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் நளினியிடம் சகஜமாக பேச தொடங்கினார்.

இதனால் அவர் நளினியிடம் தனது குடும்ப வறுமையை கூறி அழுதார். அத்துடன் டிராவல்ஸ் வைத்து நடத்தினால் அதிகமாக சம்பாதிக்கலாம். அதற்கு என்னிடம் பணம் இல்லை. உங்களிடம் பணம் இருந்தால் கொடுங்கள், அதில் வரும் லாபத்தில் உங்களுக்கும் பங்கு கொடுக்கிறேன் என்று கூறினார்.

அதை நம்பிய நளினி தன்னிடம் இருந்த ரூ.50 லட்சத்தை விஜய்யிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை வைத்து கார்களை வாங்கி டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கியதுடன், மாதந்தோறும் அதில் வரும் லாபத்தையும் கொடுப்பதாக நளினியிடம் கூறினார். 

ஆனால் அவர் கூறியபடி லாபத்தை கொடுக்கவில்லை. இது குறித்து நளினி, விஜய்யிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்க வில்லை. இதனால் நளினி தான் கொடுத்த ரூ.50 லட்சத்தை திரும்ப கேட்டார். அதையும் அவர் கொடுக்கவில்லை. தொடர்ந்து நளினி பணம் கேட்டு வந்ததால் அதை கொடுக்க விஜய் சம்மதித்தார்.

இந்த நிலையில் கோவைக்கு வந்து பணத்தை கொடுப்பதாக நளினியிடம் விஜய் கூறினார். அதன்படி அவர் கோவை காந்திபுரம் பஸ்நிலையத்துக்கு வந்தார். அங்கு வந்த நளினி, விஜய்யடம் பணத்தை கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏறு்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், இனிமேல் பணத்தை திரும்ப கேட்டால் கொன்றுவிடுவதாக கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து நளினி காட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விஜய் மீது மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பஸ்நிலையம் அருகே நின்றிருந்த விஜயை போலீசார் நேற்று காலையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story