கண்டமங்கலம் அருகே பரபரப்பு சம்பவம், காதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது, 3 பேருக்கு வலைவீச்சு
கண்டமங்கலம் அருகே காதலனை தாக்கி அவர் கண்முன்பே இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கண்டமங்கலம்,
விழுப்புரம் அடுத்த கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் தமிழக - புதுச்சேரி மாநில எல்லையில் நல்லூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும் அதே கம்பெனியில் வேலைபார்த்து வந்த புதுச்சேரி மாநிலம் சூரமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர்.
சம்பவத்தன்று காதலர்கள் இருவரும் கண்டமங்கலம் அடுத்த பள்ளிநேலியனூர் ரெயில்வே கேட் அருகே உள்ள பள்ளிச்சேரி வயல்வெளியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் அங்கு வந்தனர். காதல் ஜோடி தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, அவர்கள் அருகில் சென்றனர்.
இந்த கும்பலை பார்த்ததும் காதலர்கள், அங்கிருந்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் காதல் ஜோடியை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் காதலனை சரமாரியாக தாக்கிவிட்டு, அவர் கண் முன்னே இளம் பெண்ணை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவர்களிடம் இருந்து தப்பிச்சென்ற காதலன் தனது செல்போன் மூலம் தகவல் தெரிவித்து தனது நண்பரை வரவழைத்தார். பெண்ணை பலாத்காரம் செய்த கும்பலை அவர்கள் இருவரும் தட்டிக்கேட்டனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் காதலனையும், அவரது நண்பரையும் சரமாரியாக தாக்கினர்.
இந்த சத்தம்கேட்டு அப்ப குதி மக்கள் அங்கு திரண்டு சென்றனர். இதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. வயல்வெளியில் மயங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்ணை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், அண்ணாதுரை மற்றும் போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளிச்சேரியை சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மற்றும் போலீசார் பள்ளிச்சேரி கிராமத்துக்கு சென்றனர். அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் அய்யனார் (வயது 25) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அய்யனாரை கைது செய்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிச்சேரியை சேர்ந்த சேது, அழகுவேல் மற்றும் குச்சிப்பாளையம் அய்யனார் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் இருகிராமங்களுக்கு இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதத்தை தடுக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
காதலன் கண்முன்பே காதலி, கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story