சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி, ரெயில்களுக்கு விழுப்புரம், திருச்சியில் தண்ணீர் ஏற்றப்படுகிறது - ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை


சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி, ரெயில்களுக்கு விழுப்புரம், திருச்சியில் தண்ணீர் ஏற்றப்படுகிறது - ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2019 4:30 AM IST (Updated: 22 Jun 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு எதிரொலியாக ரெயில்களுக்கு விழுப்புரம், திருச்சியில் தண்ணீர் ஏற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விழுப்புரம், 

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு எந்தவித நடவடிக்கை எடுத்தாலும் போதுமானதாக இல்லை. இந்த குடிநீர் தட்டுப்பாடு ரெயில்வேயையும் விட்டு வைக்கவில்லை.

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விழுப்புரம், திருச்சி வழியாக செல்கின்றன. இதில் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ரெயில் பெட்டிகளில் பயணிகளுக்கு தண்ணீர் வசதி எப்போதும் இருக்கும்.

சென்னையில் இருந்து ரெயில் புறப்படும்போது அனைத்து பெட்டிகளிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு புறப்படும். இது வழக்கமான நடைமுறை தான். இந்த நிலையில் வரலாறு காணாத அளவிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்களில் முழுமையாக தண்ணீர் ஏற்றப்படுவதில்லை. இதற்கு மாற்றாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்திலும் விழுப்புரம், திருச்சி ரெயில் நிலையங்களில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் ரெயிலில் பயணிகளுக்கு தண்ணீர் வசதி கிடைக்க ரெயில்வே நிர்வாகம் மாற்று நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு திருச்சி, விழுப்புரம் ரெயில் நிலையங்களில் தண்ணீர் ஏற்றப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தினமும் 30 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதுதவிர திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரெயில்களுக்கும் வழக்கம் போல தண்ணீர் நிரப்பப்பட்டு அனுப்பப்படுகிறது.

ஒரு ரெயில் பெட்டிக்கு 1,800 லிட்டர் தண்ணீர் ஏற்றப்படுகிறது. திருச்சியில் குடிநீருக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதால் ரெயில்களுக்கு கூடுதலாக தண்ணீர் ஏற்றுவதில் பாதிப்பு இல்லை. இவ்வாறு கூறினார். திருச்சியில் ரெயில்கள் நடைமேடையில் நிற்கும்போது குழாய்களில் இருந்து தண்ணீர் ஏற்றப்படுகிறது. ஒரு ரெயில் முழுவதும் தண்ணீர் ஏற்ற 15 நிமிடங்கள் வரை ஆகும். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சுமார் 20 பெட்டிகள் வரை தண்ணீர் ஏற்றப்படுகிறது. தண்ணீர் ஏற்றுவதற்காக நடைமேடையில் ‘பைப்-லைன்’ வசதி தனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மட்டும் ரெயில்களுக்கு தண்ணீர் அதிவிரைவாக ஏற்ற நவீன கருவி உள்ளது. இதேபோல திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ரெயில் நிலையங்களிலும் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story