மேட்டுக்கடை பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்; அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


மேட்டுக்கடை பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்; அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 11:15 PM GMT (Updated: 21 Jun 2019 9:23 PM GMT)

மேட்டுக்கடை பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. அப்போது அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இந்த பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.

பெருந்துறை அருகே புத்தூர் புதுப்பாளையம் பகுதியில் ஈரோட்டை சேர்ந்த செல்வராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் நேற்று முன்தினம் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்ப்பு தெரிவித்த செல்வராஜ் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் 4 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் டாக்டர் பூபதி என்பவரது தோட்டத்தில் நேற்று உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரத்துடன் மின்சாரத்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கு உயர்மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள், இடத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதாக கூறினர். அதற்கு விவசாயிகள், `இடத்துக்கு இழப்பீடு வழங்கினால் மட்டும் போதாது. கோழி வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் இரும்பினாலான செட்டையும் அகற்ற சொல்வதால் அதற்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் உயர் மின் கோபுரம் அமைக்க குழி தோண்டும் பணி மும்முரமாக நடந்தது.

இதையொட்டி ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.


Next Story