உடுமலை அருகே குட்டையை ஆக்கிரமித்து தென்னை சாகுபடி; மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை


உடுமலை அருகே குட்டையை ஆக்கிரமித்து தென்னை சாகுபடி; மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2019 10:15 PM GMT (Updated: 2019-06-22T03:09:31+05:30)

உடுமலையை அடுத்த சின்னவாளவாடியில் குட்டைைய ஆக்கிரமித்து தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த குட்டையை மீட்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளி,

உடுமலையை அடுத்த சின்னவாளவாடி கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த குட்டை ஒன்று ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி காணாமல் போய்விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சின்னவாளவாடி கிராமத்தில் பி.ஏ.பி. பிரதான கால்வாய்க்கு அருகில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் குட்டை ஒன்று இருந்தது. அதை ஆதாரமாகக்கொண்டு சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கிணறுகள் ஆழ்குழாய் கிணறுகள் நீர் இருப்பை பெற்று வந்தன. விவசாயத் தொழிலும் நல்ல முறையில் நடைபெற்று வந்தது. குடிநீர் பஞ்சமும் ஏற்படவில்லை. மழைநீரும் வீணாகாமல் குட்டையில் முழுமையாக சேமிக்கப்பட்டது.

இந்த சூழலில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தனியார் ஒருவர் குட்டையை படிப்படியாக ஆக்கிரமிக்க தொடங்கினார். அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தோம். அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை. மேலும் குட்டை முழுவதையும் ஆக்கிரமித்து, அதை சமன் செய்து கிணறு வெட்டி தென்னங்கன்றுகளை நடவு செய்து விட்டார். இதனால் குட்டை இருந்த சுவடு அந்த பகுதியில் இல்லை. இதையடுத்து காணாமல் போன குட்டையை மீட்டுத்தருமாறு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் புகார் தெரிவித்தோம்.

ஆனால் குட்டையில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், அதை மீட்பதற்கும் அதிகாரிகள் முன்வரவில்லை. இதன் காரணமாக மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்து குட்டையில் தேங்குவதற்கு வழியில்லாமல் வீணாகி வருகின்றது. மேலும் குட்டையை நிலத்தடி நீராதாரமாகக்கொண்ட பாசனநிலங்கள் தரிசு நிலங்களாக மாறியதுடன் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் நிலத்தடி நீர்இருப்பை இழந்து தவித்து வருகின்றன.

இதனால் சாகுபடி செய்யப்பட்ட தென்னை மரங்கள் மற்றும் இதர பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகி விட்டன. தற்போது குட்டை வாளவாடி கிராம நிர்வாக அலுவலக ஆவணத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் இல்லை. எனவே வாளவாடி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து காணாமல் போன குட்டையை கண்டுபிடித்து, அதை மீட்டு நீர்வரத்தை ஏற்படுத்தி தருகின்ற நீர்வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story