போலீசாரின் கண் துடைப்பு நடவடிக்கையால் பலன் இல்லை; கருந்திரி தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த கோரிக்கை


போலீசாரின் கண் துடைப்பு நடவடிக்கையால் பலன் இல்லை; கருந்திரி தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2019 10:18 PM GMT (Updated: 2019-06-22T03:48:38+05:30)

போலீசாரின் கண் துடைப்பு நடவடிக்கையால் பலன் இல்லை எனவும் கருந்திரி தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மாவட்டத்தின் பிரதான தொழிலாக இருக்கும் பட்டாசு தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்குவது பட்டாசு கருந்திரியாகும். பெரும்பாலான பட்டாசு ஆலை நிர்வாகத்தினர், தங்களுக்கு தேவைப்படும் கருந்திரியினை வெளி நபர்களிடம் இருந்து கொள்முதல் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதிகளில் பட்டாசு திரி தயாரிக்கும் தொழில் குடிசை தொழில்போல நடந்து வருகிறது.

பல பகுதிகளில் வீடுகளில் வைத்தும், பட்டாசு திரி தயாரிப்பு தொழில் நடந்து வருவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதில் பெண்களும், குழந்தைகளுமே பலியாகும் சம்பவங்களும் நடந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகருக்கு வந்த ஒரு தனியார் பஸ்சில் ஏற்றி வரப்பட்ட பட்டாசு திரி பண்டல்களில் தீப்பிடித்ததால் பலர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.ஆனாலும் அனுமதியின்றி நடைபெறும் பட்டாசு திரி தயாரிப்பை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

போலீசார் பட்டாசு திரி தயாரிப்பு மையங்களை கண்டறிந்து தயாரிப்பு நிலையிலேயே அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வாகனங்களில் கொண்டு செல்லும்போதும் வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் பட்டாசு திரி பண்டல்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஜாமீனில் விடுவிக்கும் நிலை உள்ளது.

விருதுநகரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 தினங்களில் மட்டும் 8 ஆயிரம் குரோஸ் கருந்திரி பறிமுதல் செய்யப்பட்டு கடத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்ததோடு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் பட்டாசு திரி தயாரிப்பு தொழிலில் தடை ஏதும் ஏற்படாது. போலீசாரின் இந்த கண்துடைப்பு நடவடிக்கையால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை.

கடந்த 2010-ம் ஆண்டு பட்டாசு திரி தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கான தொழிற்கூடம் அமைக்கப்பட்டு பட்டாசு திரி தயாரிப்போர் முறையான உரிமம் பெற்று இந்த தொழிற்்கூடங்களில் பட்டாசு திரி தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஆய்வு கூட்டங்களும் நடத்தப்பட்டன.

ஆனால் பட்டாசு திரி தயாரிப்போர் இதற்கு ஒத்துழைப்பு தராத காரணத்தால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால், இந்த நடவடிக்கையில் பலனில்லை.

மனிதாபிமான நடவடிக்கையில் இந்த தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியதால் இந்த தொழிலை முறைப்படுத்தும் நடவடிக்கை தொடரவில்லை.

தற்போதுள்ள நிலையில் பட்டாசு தொழிலுக்கான பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு திரி தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொழிலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது தற்போது தொழிலில் ஈடுபட்டுள்ளோரை கண்டறிந்து அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து அவர்களுக்கு உரிமம் வழங்கி இந்த தொழிலை தொடர அறிவுறுத்த வேண்டும். அதற்கு முன்வராதோர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தாவது இந்த தொழிலை முறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

Next Story