மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்ற பயந்து மத்திய அரசின் திட்டங்களை இருட்டடிப்பு செய்கிறது; காங்கிரஸ் அரசு மீது சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்ற பயந்து மத்திய அரசின் திட்டங்களை இருட்டடிப்பு செய்கிறது; காங்கிரஸ் அரசு மீது சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Jun 2019 11:30 PM GMT (Updated: 21 Jun 2019 11:12 PM GMT)

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தினால் மக்கள் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைத்துவிடும் என்று பயந்துபோய் மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரி காங்கிரஸ் அரசு இருட்டடிப்பு செய்கிறது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று காலை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கட்சியின் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் மகேஷ் கிரி, துணை தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் தங்கவிக்ரமன், பொருளாளர் சங்கர் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜ.க. சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் 1000–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் புதுவை அரசு சார்பிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி, ஏழை எளிய மக்களுக்காக ஆயுஷ்மான் என்ற இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற்று தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடியும். புதுவை மாநிலத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடையலாம். ஆனால் தற்போது புதுவை அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் இருட்டடிப்பு செய்து வருகிறது.

இதே போல் 2022–க்குள் அனைவருக்கும் கல்வீடு என்பதும் பிரதமரின் கனவு திட்டமாக உள்ளது. அதையும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு செயல்படுத்தாமல் உள்ளது. பெரிய மாநிலங்களில் கூட இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் புதுச்சேரியில் இந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. அடுத்த மாதம்(ஜூலை) 15–ந் தேதிக்குள் இந்த திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து புதுவை மாநில அரசு மீது புகார் அளிப்போம். இந்த திட்டங்களை புதுவை மாநிலத்தில் செயல்படுத்தினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பா.ஜ.க. பக்கம் திரும்பிவிடுவார்கள் என்று காங்கிரஸ் அரசு பயப்படுகிறது. அந்த பயத்தின் காரணமாகவே இந்த திட்டங்களை செயல்படுத்தாமல் இருட்டடிப்பு செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story