பெரம்பலூர் மாவட்டத்தில், ரூ.3 கோடியில் வேளாண் விரிவாக்க மையங்கள், முதல்- அமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.3 கோடியில் வேளாண் விரிவாக்க மையங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா இரூர் மற்றும் வேப்பந்தட்டையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ.1½ கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக் கிடங்கு கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று அதன் திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் இரூர், வேப்பந்தட்டை பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், விதை சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார்.
இதையடுத்து இரூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் முன்னிலையில் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். பின்னர் பொதுமக்கள், விவசாயிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கர்ணன், வேளாண்மை இணை இயக்குனர் இளவரசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கலைவாணி, வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டியன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அறிவழகன், தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயகாண்டீபன் உள்பட பலர் உடனிருந்தனர். வேப்பந்தட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்த விழாவில் வேளாண்மை துணை இயக்குனர் ராஜசேகரன், வேளாண்மை உதவி இயக்குனர் பாபு, தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமாரி, வேளாண்மை உதவி பொறியாளர்கள் ஜனப்பிரியா, நாகராஜன் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இந்த ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ஒவ்வொன்றும் 3,814 சதுர அடியிலும், சேமிப்பு கிடங்கு 2,260 சதுர அடியிலும் கட்டப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை வளாகத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மை வணிகத் துறை மற்றும் விதை சான்று துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன. இச்சேமிப்புக் கிடங்கில் வேளாண் துறை சார்ந்த விதைகளை 400 டன் அளவிலும், தோட்டக்கலைத் துறை சார்ந்த விதைகள் 400 டன் அளவிலும் என மொத்தம் 800 டன் அளவிலான விதைகளை சேமித்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டிடப்பணிகள் யாவும் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயலாக்கப்பட்டது.
Related Tags :
Next Story