திருச்சி விமான நிலையத்தில், ரூ.66½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பயணிகள் சிக்கினர்


திருச்சி விமான நிலையத்தில், ரூ.66½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பயணிகள் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Jun 2019 11:00 PM GMT (Updated: 21 Jun 2019 11:47 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.66½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பயணிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

செம்பட்டு,

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட நகரங்களுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் திருச்சி வரும் பயணிகள் சிலர், ‘குருவி’கள் போல தங்கக்கட்டிகளையும், நகைகளையும் செருப்பு, கியாஸ் அடுப்பு உள்ளிட்டவற்றிலும், உடலிலும் மறைத்து கடத்தி வருவதும், அவர்களை சோதனை செய்து மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி விட்டது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ‘ஏர்ஏசியா’ விமானமும், சிங்கப்பூரில் இருந்து ‘ஸ்கூட்’ விமானமும் வந்தடைந்தது. இந்த விமானங்களில் வந்திறங்கிய பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த சதாம்உசேன்(வயது 36), முஷ்தாக் அலி(38), திருச்சியை சேர்ந்த அசாருதீன்(40), ஹிப்மத்துல்லா(39) ஆகிய 4 பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வந்தபோது அவர்களின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களிடம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பயணிகள் சதாம்உசேன், முஷ்தாக் அலி, அசாருதீன் ஆகியோர் பசை வடிவில் உடலில் மறைத்து 1 கிலோ 418 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஹிப்மத்துல்லா காலணியில்(ஷூ) மறைத்து தங்க சங்கிலிகளாக 522.50 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, அவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்படி திருச்சி விமான நிலையத்தில் 4 பயணிகளிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 940 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.66 லட்சத்து 50 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பிடிபட்ட 4 பயணிகளிடம், தங்கம் கடத்தலுக்கு மூளையாக செயல்படுபவர் யார்? என மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story