ஆட்சியை நடத்த முடியாவிட்டால் குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் எடியூரப்பா பேச்சு


ஆட்சியை நடத்த முடியாவிட்டால் குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 23 Jun 2019 4:30 AM IST (Updated: 22 Jun 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

ஆட்சியை நடத்த முடியாவிட்டால் குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

ஆட்சியை நடத்த முடியாவிட்டால் குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடியூரப்பா கூறினார்.

உறுப்பினர் சேர்க்கை

கர்நாடக பா.ஜனதா சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடக்க விழா நேற்று பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு, செல்போன் எண்ணை வெளியிட்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி அரசின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன. மாநிலத்தின் வளர்ச்சி குறைந்துவிட்டது. இந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அதனால் இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் பணியை விரைவாக செய்ய வேண்டும். அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

கிராம தரிசனம்

இந்த அரசுக்கு மானம், மரியாதை இருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த உடனேயே ராஜினாமா செய்திருக்க வேண்டும். கலபுரகியில் இன்று (நேற்று) நடைபெற இருந்த கிராம தரிசன நிகழ்ச்சியை குமாரசாமி, மழையை காரணம் காட்டி ரத்து செய்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட குமாரசாமி, மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் தனது தந்தையின் பேச்சை கேட்டு, இந்த கிராம தரிசன திட்டத்தை தொடங்கியிருக்கிறார். இதற்கு முன்பு குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, கிராம தரிசனம் நடத்தியபோது, அவர் தங்கிய கிராமங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதா?.

அனுமதிக்க மாட்டோம்

குமாரசாமி சொன்னது என்ன, செய்தது என்ன என்பது குறித்து ஒரு புத்தகத்தை 24-ந் தேதி (நாளை) வெளியிட உள்ளோம். மக்களால் நிராகரிக்கப்பட்ட குமாரசாமி, கிராம தரிசனத்தை கைவிட்டு, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். குமாரசாமி ஒருபுறம் கிராம தரிசனத்தை நடத்துகிறார். இன்னொருபுறம், சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று தேவேகவுடா சொல்கிறார். 2 கட்சிகளும் சரியான புரிதலுடன் செயல்படவில்லை. சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆட்சியை நடத்த முடியாவிட்டால் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும்.

பகல் கொள்ளை

நாங்கள் 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம், அத்துடன் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் பெற்று ஆட்சி நடத்துவோம். கடந்த ஓராண்டில் பொதுப்பணித்துறை உள்பட பல்வேறு துறைகளில் பகல் கொள்ளை நடந்துள்ளது. கர்நாடக அரசியலில் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story