இ-அடங்கல் சேவை ஜூலை 1-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் திருச்சியில் வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி


இ-அடங்கல் சேவை ஜூலை 1-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் திருச்சியில் வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2019 11:00 PM GMT (Updated: 22 Jun 2019 6:25 PM GMT)

இ-அடங்கல் சேவை ஜூலை 1-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று திருச்சியில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறினார்.

திருச்சி,

ஒரு கிராமத்தில் உள்ள நஞ்சை, புஞ்சை, புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து நிலங்களின் புல எண்கள் விவரங்கள் அடங்கிய பதிவேடு அடங்கல் பதிவேடு ஆகும். அடங்கல் பதிவேட்டில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட பயிரின் வகை, விவசாயியின் பெயர், புலஎண், உட்பிரிவு, பரப்பு, தீர்வை, பாசனத்தின் தன்மை, போகம், அறுவடை நாள், விளைச்சல் விழுக்காடு ஆகிய விவரங்கள் இருக்கும். மேலும் கிராமத்தில் உள்ள நீர்நிலை ஆதாரங்கள், ஆக்கிரமிப்புகள் போன்ற விவரங்களும் அடங்கலில் பதிவு செய்யப்படுகிறது. அடங்கல் கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அடங்கல் சான்றிதழ் நகல் இருந்தால் தான் விவசாயிகள் வங்கி கடன், மானியம், வறட்சி உள்ளிட்ட நிவாரணம் பெற முடியும். வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் இந்த அடங்கல் சான்றிதழை பெற விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதால், செல்போன் செயலி மற்றும் இணையதளம் மூலம் பெறும் வகையில் இ-அடங்கல் சேவை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இ-அடங்கல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான செல்போன் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இ-அடங்கல் சேவை குறித்து திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பயிற்சி நடந்தது. இதில் அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

பயிற்சியின் போது இ-அடங்கல் சேவையை பயன்படுத்தும் முறை குறித்து அவர் எடுத்து கூறினார். செல்போன் செயலியில் விவசாயிகள் தங்களது நிலத்தின் பரப்பு, பயிர்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யலாம், செல்போன் செயலி வசதி இல்லாதவர்கள் கணினி மையத்தில் இணையதள சேவையின் மூலம் பதிவு செய்யலாம், என்றார். பின்னர் சத்யகோபால் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

நாட்டில் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக இ-அடங்கல் சேவை தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான் விவரங்களை விவசாயிகள் தாங்களே பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-அடங்கல் சேவை ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும். இத்திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எண் வழங்கப்படும். விவசாயிகள் பதிவிடும் விவரங்களை கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு சான்றளிப்பார்கள். இந்த திட்டம் வருவாய்த்துறை, விவசாயம், தோட்டக்கலை, புள்ளியல் துறைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாநிலம் முழுவதும் எவ்வளவு பயிரிடப்பட்டுள்ளது, விவசாய பரப்பு நிலம், அறுவடை விவரங்களையும் அறிய முடியும். எழுத்துப் பூர்வமாக வழங்கப்பட்டு வந்த நகல் இனி இணையதளம் வழியாக வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் விவசாயிகளும் மானியம், விவசாய கடன், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பலன்களை பெற முடியும். விவசாயிகள் தவறாக பதிவு செய்திருந்தால் அதனை கிராம நிர்வாக அதிகாரி நேரில் ஆய்வு செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டால் அவரது பதிவு ரத்து செய்யப்படும். விவசாயிகள் பதிவிடும் போது தங்களது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். பதிவில் மறு திருத்தம் மேற்கொள்ளவும் வசதி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் சிவராசு உடன் இருந்தார்.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஸ்ரீரங்கம் சப்- கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஜவகர், ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன், த.மா.கா. விவசாயிகள் அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story