காங்கிரசுக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு


காங்கிரசுக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 22 Jun 2019 11:00 PM GMT (Updated: 22 Jun 2019 6:45 PM GMT)

காங்கிரசுக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என்று திருச்சியில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பரபரப்பாக பேசினார்.

திருச்சி,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து, திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று காலை தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்படும் என்று முன்பே தெரிந்திருந்தும், குடிநீர் பிரச்சினைக்கு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தை கண்டித்தும், முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக படுதோல்விகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தமிழக அரசின் தலையாய கடமை. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விட்டால் குடிசைக்குள் புகுந்துவிடும். பிறகு வெள்ள நிவாரணம் கொடுக்க வேண்டியது வரும் என்று தண்ணீரை கொள்ளிடத்தில் திறந்து விடாமல் காவிரியில் திறந்து விட்டு தண்ணீரை வீணாக கடலில் கலக்க விட்டது இந்த ஆட்சியில் தான். ஆனால் மழை வேண்டி யாகம் நடத்துகிறார்கள்.

திருச்சியில் இருந்து, ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம், 700 கிராமங் களுக்கு குடிநீர் கொடுத்தவர் கருணாநிதி. அப்போது திருச்சியின் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தடுக்க கருணாநிதி தடுப்பணை அமைத்து கொடுத்தார். முக்கொம்பு அணை உடைந்தபோது, மூன்று போக சாகுபடிக்கு தேவையான தண்ணீரை வீணாக கடலில் விட்டவர்கள் இந்த ஆட்சியாளர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொள்ளிடத்தில், காவிரியில் தடுப்பணைகள் அமைப்பது உள்பட நீண்டகால பயன் கள் தரும் அனைத்து திட்டங் களையும் செய்து தருவோம்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நமது கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்லக்குமார், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நமது ஆட்சியை தொடர்ந்து மோசமாக விமர்சித்து வந்தார்கள். ஆனால், அடுத்த தேர்தலில், நம்மை விமர்சித்த அவர்களின் வெற்றிக்கு, நாம் தான் பாடுபட வேண்டியிருந்தது.

வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு இத்தனை சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும் என்று காஞ்சீபுரத்தில் ஒருவர் பேசியிருக்கிறார். காங்கிரசில் உள்ள சிலர் பேசுவது சரியாக இல்லை. அவர்கள் கட்சி தலைமைக்கு தெரிந்துதான் பேசுகிறார்களா? அல்லது தலைமையின் ஒப்புதலோடுதான் பேசுகிறார்களா என தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு இத்தனை சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும் என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏற்கக்கூடாது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து தான் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு எத்தனை நாள் நாம் பல்லக்கு தூக்குவது?. குறைந்தபட்சம், உள்ளாட்சி தேர்தலில் திருச்சியிலாவது தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என்று தலைமையை வலியுறுத்துவேன். இருப்பினும் கூட்டணி விவகாரத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றிபெற்றது. இதே கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடவேண்டும் என்று கே.என்.நேரு பேசியிருப்பது இரு கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துறையூர் ஸ்டாலின் குமார், லால்குடி சவுந்தரபாண்டியன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே கே.என்.நேரு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் நேற்று மதியம் கூறுகையில், “தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதன் அடிப்படையில் கட்சியின் மாவட்ட செயலாளராக எனது எண்ணத்தை தான் ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியில் பேசிய சிலர் உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு அதிக இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று கூறி இருந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக எங்களது ஆட்களுக்கு அதிக இடங்கள் வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் அவ்வாறு பேசினேன். மற்றபடி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று நான் பேசவில்லை. தலைவரின் முடிவுக்கு கட்டுப்படும் மாவட்ட செயலாளராக என்றுமே நான் இருப்பேன்” என்றார்.

Next Story