திருச்சியில் மாநில சீனியர் தடகள போட்டி 1,450 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு


திருச்சியில் மாநில சீனியர் தடகள போட்டி 1,450 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Jun 2019 4:30 AM IST (Updated: 23 Jun 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மாநில சீனியர் தடகள போட்டி நடந்தது. இதில் 1,450 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

திருச்சி,

92-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,450 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் செயிண்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமி, அரைஸ் ஸ்டீல் கிளப், கோவை அத்லெட்டிக் கிளப், தமிழ்நாடு போலீஸ் அணி, தெற்கு ரெயில்வே உள்பட மொத்தம் 58 விளையாட்டு அகாடமிகள் மற்றும் சங்கங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளும் அடங்குவர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்பட வீரர்-வீராங்கனைகளுக்கு தலா 23 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. திருச்சி மாவட்ட தடகள சங்க தலைவர் ராமசுப்பிரமணி தலைமை தாங்கினார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தடகள சங்க செயலாளர் லதா, போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு மற்றும் மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பெருமாள்ராமசாமி ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த ஹேமமாலினி முதல் இடத்தையும், தெற்கு ரெயில்வே அணியை சேர்ந்த சரஸ்வதி 2-ம் இடமும் பிடித்தனர். பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பெரம்பலூர் எஸ்.டி.ஏ.டி. அணியை சேர்ந்த கிருத்திகா ராஜ்குமார் முதல் இடத்தையும், பூங்கொடி 2-ம் இடத்தையும் பிடித்தனர். ஆண்களுக்கான கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் செயிண்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த சிவசுப்பிரமணி முதலிடத்தையும், தமிழ்நாடு போலீஸ் அணியை சேர்ந்த தங்கவசந்த் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணியை சேர்ந்த கீதா முதல் இடத்தையும், செயிண்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த நீலாம்பரி 2-ம் இடத்தையும் பிடித்தனர். போட்டிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதன் பரிசளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

Next Story