பிரச்சினையின்றி செயல்பட்டால் அரசு தலையிடாது: நடிகர் சங்க தேர்தலை அமைதியாக நடத்தவேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
நடிகர் சங்க தேர்தலை அமைதியாக நடத்திக்கொள்ள வேண்டும். பிரச்சினையின்றி செயல்பட்டால் அரசு தலையிடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
நடிகர் சங்க தேர்தலை அமைதியாக நடத்திக்கொள்ள வேண்டும். பிரச்சினையின்றி செயல்பட்டால் அரசு தலையிடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
வருண யாகம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று அ.தி.மு.க. சார்பில் வருண யாகம் நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போர்க்கால நடவடிக்கை
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் ஆய்வுக்கூட்டம் நடத்தி, தேவையான சிறப்பு நிதிகளை ஒதுக்கி போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறார். சென்னைக்கு மட்டும் 200 கோடி ரூபாய் ஒதுக்கி ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார்.
மன்னர் காலத்தில் வருண ஜெபம், யாக பூஜைகள் நடத்தியதால் மாதம் மும்மாரி மழை பெய்தது என்பது வரலாறு. அதன் அடிப்படையில் ஆன்மிக பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அ.தி.மு.க. சார்பில் இந்த வருண ஜெபம், யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே பிரச்சினை என்றால் ஆலயங்களில் வழிபாடு நடத்துவது தமிழர்களின் பண்பாடு, இயற்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அ.தி.மு.க. தற்போது செய்து வருகிறது.
நடிகர் சங்க தேர்தல்
தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இணைவது என்றால் அது அவரது விருப்பம். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணைவது வழக்கம். ஏற்கனவே முதல்வர், துணை முதல்வர் இருவரும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சசிகலா, தினகரன் இருவரும் தலைமை தாங்கி இயக்கத்தினை தொடங்கியவர்கள். மற்றவர்கள் அப்படி இல்லை. தொடங்கியவர்களுக்கும், இணைந்தவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அங்கு சென்றவர்கள் திரும்பி வருகின்றனர். அவர்களை நாங்கள் தாய் உள்ளத்தோடு ஏற்றுக் கொள்கிறோம்.
நடிகர் சங்கம் மட்டுமல்ல, வேறு எந்த சங்கமாக இருந்தாலும் சுமூகமான முறையில் தேர்தல் நடந்தால் நல்லது தான். அவர்கள் பிரச்சினையின்றி செயல்பட்டால் அரசு தலையிடாது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொதுக்குழு கூட கூட்ட முடியாத நிலையில்தான், அரசு தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டது. நடிகர் சங்க தேர்தலை அமைதியாக, இணக்கமாக நல்ல முறையில் நடத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தற்போது எங்களுடைய கவனம் எல்லாம் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது மட்டும்தான். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story