இலங்கையில் பதவி விலகியதன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம் முன்னாள் மந்திரி சையதுஅலி பேட்டி


இலங்கையில் பதவி விலகியதன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம் முன்னாள் மந்திரி சையதுஅலி பேட்டி
x
தினத்தந்தி 23 Jun 2019 4:30 AM IST (Updated: 23 Jun 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில், பதவி விலகியதன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம் என்று முன்னாள் மந்திரி சையதுஅலி கூறினார்.

திருச்சி,

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, அந்த நாட்டில் 9 மந்திரிகள் பதவி விலகினர். அவர்களில் ஒருவர் சையதுஅலி ஜாகீர் மவுலானா. இலங்கை எம்.பி.யும், முன்னாள் மந்திரியுமான சையதுஅலி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்று காலை திருச்சி வந்தார்.

திருச்சி விமானநிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கு

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வெற்றிபெற்ற எம்.பி.க்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் 9 மந்திரிகள் பதவி விலகியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுக்கவே இந்த பதவியில் சேர்ந்தோம். ஆனால் அங்கு சட்டம்-ஒழுங்கு சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை முஸ்லிம்கள் அனைவரும் எதிர்த்தார்கள். ஆனால் இலங்கைக்கு தொடர்பு இல்லாத முரண்டுபிடித்த தீவிரவாதிகள் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களை வன்மையாக கண்டிக் கிறோம்.

இலங்கை அரசுக்கு அழுத்தம்

அவ்வாறான தாக்குதல் குறித்து முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தும், அதனை பொருட்படுத்தவில்லை. இதனை தொடர்ந்து அங்கு சமாதானத்துடன் வாழ்ந்து வருகிற முஸ்லிம்களை துன்புறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை எடுத்து கூறியும் கேட்காததால் அந்த பதவியில் இருக்க அவசியமில்லை.

எங்களது அழுத்தத்தின் காரணமாக அங்கு கைது செய்யப்பட்டு இருந்த 450 பேர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் பலர் சிறையில் இருக்கிறார்கள். எங்களுடைய பதவி வெறும் அலங்காரமாக இருக்கக்கூடாது. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். நாங்கள் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்.

பிரதமர் மோடி இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இலங்கைக்கு வந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து சென்றுள்ளார். ஆனால் தமிழகத்தில் அவரது கொள்கைகள் எடுபடவில்லை. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். இங்கு தமிழ் பேசும் மக்களோடு சேர்ந்து இன்னும் பல கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story