கடும் குடிநீர் தட்டுப்பாடு: தமிழக அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


கடும் குடிநீர் தட்டுப்பாடு: தமிழக அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2019 4:15 AM IST (Updated: 23 Jun 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவூர்,

தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சரியான நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து தி.மு.க. சார்பில், தமிழ்நாடு முழுவதும் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அதேபோல விராலிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆம்பூர்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையின் நடுவே அமர்ந்து தண்ணீர் வேண்டும், தண்ணீர் வேண்டும் என்றும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதில் முன்னாள் ஒன்றியச்செயலாளர் முபி மணி, மாவட்ட பிரதிநிதி மண்டையூர் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர், விவசாய அணி செயலாளர் செல்லத்துரை, ம.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சாத்தப்பன், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விளாப்பட்டி சிவக்குமார் மற்றும் ஒன்றிய ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி, ஆவுடையார்கோவில்

பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா முன்னிலை வகித்தார். இதில் நகர செயலாளர் அழகப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவுடையார் கோவிலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் சண்முகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. சட்ட திருத்த குழு முன்னாள் உறுப்பினர் ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர் தாஹீர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவரங்குளம், அறந்தாங்கி, அரிமளம்

திருவரங்குளம் கடைவீதியில், தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில், ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல அறந்தாங்கி தபால் நிலையம் அருகே தி.மு.க. மாவட்ட அவை தலைவர் பொன்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரிமளம் எட்டாம் மண்டகபடி பகுதியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொன்.ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் திரளான தி.மு.க. வினர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசிற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

விராலிமலை

விராலிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து விராலிமலை சுங்கச்சாடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பழனியப்பன், அன்பழகன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 

Next Story