குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2019 4:30 AM IST (Updated: 23 Jun 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி கரூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

கரூர் சட்டமன்ற தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசுகையில், கரூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதேபோல் தான் சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிற சூழலில், அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கமுடியவில்லை எனில் பதவி விலக வேண்டும்.

8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிற வேளையில் தி.மு.க.வை குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. இது அரசின் செயல்படாத தன்மையை காட்டுகிறது. தி.மு.க. ஆட்சி அமையும் போது விரைவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்களால் தான் இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றை தடுக்க முடிந்தது என்றார். இதில் மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் பரணி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷம்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.கே.டி.ராஜ்கண்ணு, தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் எம்.ரகுநாதன், கரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.கந்தசாமி, கரூர் மத்திய நகர செயலாளர் எஸ்.பி.கனகராஜ், கரூர் தெற்கு நகர செயலாளர் வக்கீல் சுப்பிரமணியன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காவிரிக்கரையோர மக்கள் அவதி

அதனை தொடர்ந்து செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், கரூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் காவிரி, அமராவதி ஆறுகள் இருக்கின்றன. ஆனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு கூட சரிவர குடிநீர் கிடைக்காததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் கடம்பங்குறிச்சி, நன்னியூர், வாங்கல் குப்புச்சிபாளையம், நெரூர் உள்ளிட்ட காவிரிகரையோர மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 28-ந்தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதில் கரூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து எடுத்துரைக்கப்படும். சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியை கேட்டு பெற்று அந்த திட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் தண்ணீர் பிரச்சினைக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Next Story