மழைவேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் அ.தி.மு.க. சார்பில் நடந்தது


மழைவேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் அ.தி.மு.க. சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 23 Jun 2019 4:15 AM IST (Updated: 23 Jun 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

மழைவேண்டி அ.தி.மு.க. சார்பில் கரூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு யாகம் நடந்தது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. காவிரியாற்றில் நீர்வரத்து இல்லாத போதும், குடிநீர்மேம்பாட்டு பணிகள் மூலம் அங்கு அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு கிணறுகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு குழாய் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்று வினியோகிக்கப்படுகிறது. கடவூர், தோகைமலை பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர்வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து வினியோகிக்கும் பணியும் நடக்கிறது.

எனினும் கரூர் மாவட்ட மக்களுக்கு தட்டுப்பாடின்றி சீராக தண்ணீர் கிடைக்கவும் மழை பெய்ய வேண்டியும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை வருணபகவானுக்கு சிறப்பு யாகம் நடந்தது. அப்போது கோவிலின் பிரகாரத்தில் புனிதநீர் குடத்தை வைத்து வேதமந்திரங்களை முழங்கி குருக்கள் யாகம் நடத்தினர். இதில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

சுமார் 2½ மணி நேரத்திற்கும் மேலாக நடந்த யாக பூஜைக்கு பிறகு, பசுபதீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் அ.தி.மு.க. சார்பில் பக்தர்கள் உள்ளிட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராஜ், கரூர் நகர ஜெ.பேரவை செயலாளர் செல்வராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில் எம்.எல்.ஏ. கீதா தலைமையிலும், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் தலைமையிலும், அரவக்குறிச்சி ஈஸ்வரன் கோவிலில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையிலும் சிறப்பு யாகம் நடந்தது.

Next Story