மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த வாலிபர் திடீர் சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு


மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த வாலிபர் திடீர் சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
x
தினத்தந்தி 22 Jun 2019 11:00 PM GMT (Updated: 22 Jun 2019 7:29 PM GMT)

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த வாலிபர் திடீரென இறந்தார். அவருடைய உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செம்பட்டு,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 31). இவருடைய மனைவி திருச்செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு தனியார் உணவகத்தில் பணியாற்ற ராமச்சந்திரன் மலேசிய நாட்டுக்கு சென்றார்.

இந்தநிலையில் விடுமுறைக்காக அவர் நேற்று முன்தினம் மாலை ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். விமானம் இரவில் திருச்சி வந்தடைந்ததும், அவர் விமானத்தில் இருந்து இறங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால் இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்க காலதாமதம் ஆனதாக தெரிகிறது. பின்னர்தான் அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் விமானநிலையத்துக்கு வந்தடைந்தனர்.

அங்கு அவர்கள் ராமச்சந்திரனின் உடலை வாங்க மறுத்து விமான நிறுவனத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ராமச்சந்திரன் விமானத்தில் இறந்ததை உறுதி செய்துள்ளதாகவும், அப்படி இறந்ததால் பயணிக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் காப்பீடு தொகையை வழங்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காவேரி, ரமேஷ் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Next Story