தாராபுரம் பகுதியில் வெட்ட தாமதமானதால் சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்தம் ஆன கரும்புகள் காய்ந்துவிட்டது; விவசாயிகள் கவலை


தாராபுரம் பகுதியில் வெட்ட தாமதமானதால் சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்தம் ஆன கரும்புகள் காய்ந்துவிட்டது; விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 22 Jun 2019 11:00 PM GMT (Updated: 22 Jun 2019 7:51 PM GMT)

தாராபுரம் பகுதியில் வெட்டுவதற்கு தாமதமானதால் சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்தம் ஆன கரும்புகள் காய்ந்து போனது. இதனால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தாராபுரம்,

தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி அணையின் பழைய ஆயக்கட்டு பாசனத்தில், முன்பு அதிக அளவில் கரும்பு சாகுபடி நடைபெற்று வந்தது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் நாட்டுச்சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தின் தேவை அதிகம் இருந்ததால், இப்பகுதி விவசாயிகள் தாங்களாகவே கரும்பு ஆலை அமைத்து, அல்லது பொதுவாக அமைக்கப்படும் ஆலைகளுக்கு கரும்புகளை கொடுத்து, உருண்டை வெல்லத்தையும், நாட்டுச்சர்க்கரையையும் உற்பத்தி செய்து வந்தார்கள்.

மேலும் அதை நேரடியாகவே வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தார்கள். உருண்டை வெல்லம் அதிக அளவில் உற்பத்தியானதால், கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பொது ஏல விற்பனைக்கு வசதிகள் செய்யப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை விற்பனை செய்யவில்லை. அதற்கான வாய்ப்பும் ஏற்படவில்லை.

காலப்போக்கில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், இந்த பகுதியில் கரும்பு சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் 100 சதவீத கரும்பு சாகுபடி படிப்படியாக குறைந்து தற்போது 20 சதவீதம் அளவிற்கு மட்டுமே நடைபெற்று வருகிறது. கரும்பு உற்பத்தி குறைந்ததால், ஆலைகள் அமைப்பதில் சிக்கல் உருவானது. தவிர ஆட்கள் பற்றாக்குறை என்பது விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையாகிவிட்டது.

இந்த நிலையில் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக கரும்புகளை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதாவது ஒப்பந்தம் செய்கிறார்கள். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தற்போதைய நிலைமை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிட்டது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

உடுமலை, தாராபுரம், பழனி, பொள்ளாச்சி என ஆலையை சுற்றியுள்ள பல ஊர்களைச் சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான கரும்பு விவசாயிகள் இந்த ஆலையினால் பயனடைந்து வந்தார்கள் என்பது உண்மை.

இந்த நிலையில் அரசு இந்த ஆலையை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. நவீன எந்திரங்களை பயன்படுத்தாமல் பழைய எந்திரங்களைக்கொண்டே இந்த ஆலை இயங்கி வந்தது.

இதனால் எந்திரங்கள் அடிக்கடி பழுதடைய ஆரம்பித்தது. எந்திரக்கோளாறு காரணமாக, சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது. காய்ந்துள்ளது

இந்த நிலையில் ஒப்பந்தத்தில் உள்ள கரும்புகளை ஆலை நிா்வாகம் குறிப்பிட்ட காலத்தில் வெட்டுவதில்லை. 11 மாதத்தில் வெட்ட வேண்டிய கரும்புகள் இந்த பகுதியில் 13 மாதங்களாகியும் வெட்டப்படாமல் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், அலங்கியம் பகுதியில் கரும்புகள் காய்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சர்க்கரை ஆலை மேலும் தாமதமாக கரும்புகளை வெட்டுவதால், கரும்புகள் முழுவதும் காய்ந்து விட்டது. இதனால் விவசாயிகளுக்கு வருமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

எனவே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒப்பந்தம் செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து உழவர் உழைப்பாளா் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:- அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கணியூர் கோட்டத்தில், சுமார் 1,200 ஏக்கர் கரும்பு இந்த ஆண்டு ஆலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் அலங்கியம், செலாம்பாளையம் சிக்கினாபுரம், சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் கரும்பு ஒப்பந்தத்தில் உள்ளது.

சர்க்கரை ஆலை நிர்வாகம் குறிப்பிட்ட தருணத்தில் கரும்பை வெட்டியிருக்க வேண்டும். ஆலை நிர்வாகம் வெட்டவில்லை. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அலங்கியம் பகுதியில் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு, ஏக்கருக்கு 35 டன் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஆலை நிர்வாகம் கரும்பை உரிய காலத்தில் வெட்டாததால், ஏக்கருக்கு 15 டன் வரை இழப்பு ஏற்படுகிறது.

கரும்பு வெட்டுவதற்காக ஏக்கருக்கு ரூ.650-ஐ ஆலை நிர்வாகம் பிடித்தம் செய்து கொள்கிறது. தற்போது தாமதமாக கரும்பு வெட்டும்போது ஏக்கருக்கு ரூ.750 செலவாகிறது. இந்த கூடுதல் செலவீனமும் விவசாயிகளை பாதிக்கிறது.ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story