கன்னியாகுமரி தொகுதி வாக்காளர்களுக்கு வசந்தகுமார் எம்.பி. நன்றி தெரிவித்தார்


கன்னியாகுமரி தொகுதி வாக்காளர்களுக்கு வசந்தகுமார் எம்.பி. நன்றி தெரிவித்தார்
x
தினத்தந்தி 23 Jun 2019 4:15 AM IST (Updated: 23 Jun 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு எச்.வசந்தகுமார் எம்.பி. நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நேற்று சுசீந்திரத்தில் இருந்து தொடங்கினார்.

சுசீந்திரம்,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எச்.வசந்தகுமார். அவர், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தை நேற்று சுசீந்திரத்தில் இருந்து தொடங்கினார்.

முன்னதாக அவர் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில் முன்பிருந்து தனது நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

இதே சுசீந்திரம் பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக உங்களை சந்திக்க வந்தபோது எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாரம் படைத்த ஆண்டவனை வணங்கி, மக்கள் பணி செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டேன். உங்களின் ஆதரவோடும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவிலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவிலும் வெற்றி பெற்றுள்ள நான் மக்களுக்காகவும், தொகுதிக்காகவும் மேற்கொள்கிற பணிகளை விரைவில் காண்பீர்கள் என்ற உறுதியை உங்களுக்கு இந்த நேரத்தில் தருகிறேன்.

குமரி மாவட்ட விவசாயிகளுக்கும், மீனவ மக்களுக்கும் பயன்தரக்கூடிய வகையிலும், அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டும் தனியாக பண்பலை வானொலி நிலையங்கள் நிறுவப்பட்டு, அறிவிப்புகளை தரவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்.

எனவே உங்களுக்கு நான் தொடர்ந்து சேவை செய்வேன், அதற்கு நீங்கள் தொடர்ந்து எனக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு எச்.வசந்தகுமார் பேசினார்.

பின்னர் அவர் சுசீந்திரம் ரதவீதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.ரத்தினகுமார்,ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, மதியழகன், பேரூர் செயலாளர் மாடசாமி, மணி, காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர்கள் காலபெருமாள், அசோக்ராஜ், செல்வராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு எச்.வசந்தகுமார் கூறினார்.

Next Story